டீ கெட்டில் எனப்படும் எலக்ட்ரானிக் பொருளில், போதைப்பொருளை மறைத்து வைத்து நூதன முறையில் ஆஸ்திரேலியவிற்கு கடத்த முயன்ற இருவரை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சென்னை மண்டல அதிகாரிகளுக்கு கூரியர் மூலம் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் ஆஸ்திரேலியாவிற்கு கடத்த இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சென்னையில் உள்ள தனியார் கூரியர் நிறுவன அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் அங்கு சந்தேகிக்கும் வகையில் இருந்த பார்சலை பிரித்து சோதனை நடத்தினர். பிரிக்கப்பட்ட பார்சலில் டீ ஊற்றி வைக்க பயன்படும் டீ ட்ரம், மற்றும் வெண்கலத்தாலான டம்ளர், தட்டுக்கள் இருந்துள்ளது.
அதை சோதனையிட்ட அதிகாரிகள் டீ ட்ரம்மின் பின்பக்கத்தில் வெள்ளை நிறத்தில் மாவு போன்ற பொருள் இருப்பதை கண்டு பிடித்தனர் அதை சோதனைக்கு உட்படுத்தியபோது அது சூடோ எபிட்ரைன் என்கிற தடைசெய்யப்பட்ட போதைப் பொருள் என தெரிய வந்தது. பறிமுதல் செய்யப்பட்ட ரசாயனத்தை முறையாக உரிமம் பெற்று பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கவும், பெயிண்ட் தயாரிக்கவும், ஜவுளி தயாரிக்கவும் பயன்படுத்தலாம் எனவும் ஆனால் இதே ரசாயனத்தை வேறு சில தடை செய்யப்பட்ட ரசாயனங்களுடன் இணைத்து ஹெராயின், மெத்தபடைன் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருள் தயாரிக்க இதை பயன்படுத்தப்படுவதால் உரிமம் மற்றும் அனுமதியின்றி எடுத்துச் செல்வது குற்றம் என தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து தடை செய்யப்பட்ட 5 கிலோ போதை பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய கடத்தல் கும்பல் தலைவன் ஃபைசல் மற்றும் கூட்டாளி பாஷாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.