குற்றம்

மூதாட்டிகளை நூதனமாக ஏமாற்றி திருட்டு: 27 நாட்களில் 15 பேரிடம் திருடிய நபர் கைது

மூதாட்டிகளை நூதனமாக ஏமாற்றி திருட்டு: 27 நாட்களில் 15 பேரிடம் திருடிய நபர் கைது

Veeramani

குழந்தைக்கு ஆசிர்வாதம் செய்ய வேண்டும் என கூறி மூதாட்டிகளின் கவனத்தை திசை திருப்பி தங்க நகைகளை திருடி வந்த திருடன் போலீசில் சிக்கினான். 27 நாட்களில் 15 திருட்டுகளில் ஈடுபட்ட அந்த திருடனைப்பற்றிய தகவல்கள் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இந்த நபர் தனியாக நடந்து செல்லும் மூதாட்டிகளை குறிவைத்து ஆசைவார்த்தை கூறி அரசு உதவி தொகை வாங்கித் தருவதாகவும், குழந்தையை வாழ்த்த வந்தால் தங்க நகை கொடுப்பதாகவும் கூறி சென்னையில் கவனத்தை திசை திருப்பி தங்க நகைகளை திருடும் சம்பவங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். 27 நாட்களில் தொடர்ந்து 15 திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டவன்தான் இந்த நபர். 

கடந்த மாதம் 23-ம்தேதி மயிலாப்பூர் திருவள்ளுவர் சிலை அருகில் நடந்து சென்ற ராயப்பேட்டையைச் சேர்ந்த 65 வயது மூதாட்டி ரவணம்மாவிடம் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் அருகில் உள்ள தனது உறவினரின் குழந்தைக்கு பிறந்தநாள் எனவும் குழந்தையை தாங்கள் வந்து வாழ்த்த வேண்டும் என்று கூறி ராவணம்மாவின் கைகளில் இருந்த மூன்று மோதிரங்களை திருடிச் சென்ற சம்பவம் தொடர்பாக மயிலாப்பூர் காவல்துறை துணை ஆணையர் சசாங்சாய் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

மயிலாப்பூர், ராயப்பேட்டை, ஐஸ்அவுஸ் பகுதிகளில் உள்ள 35-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை தனிப்படை போலீசார் தீவிர ஆய்வு செய்தனர். அதில் மூதாட்டிகளை ஏமாற்றி திருடன் அழைத்து சென்று நகைகளை திருடும் காட்சிகள் பதிவாகி இருந்தது. திருடனை ஆய்வு செய்ததில் பழைய குற்றவாளியான  கீழ்ப்பாக்கத்தை அடுத்த டிபி சத்திரம் பகுதியைச் சேர்ந்த திருமலை என்பது தெரிய வந்தது.

இவர் கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து, தனிப்படை போலீசார் விரைந்து சென்று கைது செய்ய சென்றனர். ஆனால், திருமலை தலைமறைவாகி விட்டார். இதனால் தனிப்படை போலீசார் கல்லறை தோட்டத்திலேயே ஒரு வாரம் பதுங்கி இருந்தனர். நேற்று திருமலை அங்கு வந்தபோது அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். மயிலாப்பூர் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.

போலீசாரின் விசாரணையில் தனியாக நடந்து செல்லும் முதியவர்களிடம் தங்கநகைகளை பறிப்பதை வாடிக்கையாகவே திருமலை வைத்துள்ளது தெரியவந்தது. இரண்டு முறைகளில் இவர் முதியவர்களை ஏமாற்றி வந்துள்ளார். தனியாக நடந்து செல்லும் முதியவர்களிடம் அருகில் ஒரு நகை கடை திறந்து இருப்பதாகவும் அங்கு வயதான முதியவர்களுக்கு இலவசமாக நகைகள் கொடுப்பதாகவும் கூறுவார்.

பின்னர் நகைகள் அணிந்து சென்றால் நகைக்கடையில் இலவசமாக நகைகள் தர மாட்டார்கள் எனவும் தாங்கள் அணிந்திருக்கும் தங்க நகைகளை கழட்டி தன்னிடம் கொடுத்து விட்டு, நகை கடையில் தங்க நகையை வாங்கியவுடன் தான் மீண்டும் அதனை ஒப்படைத்ததாகவும் கூறி நகைகளை திருடி சென்றுள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.  மேலும் தனது உறவினர் குழந்தைக்கு பிறந்தநாள் என்றும் தாங்கள் வந்து குழந்தையை ஆசீர்வதித்தால் குழந்தையின் பெற்றோர் ஒரு சவரன் தங்க நகை கொடுப்பார்கள் எனவும் கூறியும் முதாட்டிகளின் நகைகளை பறித்து செல்வதையும் தனது ஸ்டைலாக கொண்டுள்ளார் கைதான திருமலை.

மேலும், இவர் மீது எஸ்பிளனேடு, அமைந்தகரை, அரும்பாக்கம், வண்ணாரப்பேட்டை, ஜாம்பஜார், அண்ணாசாலை, எஸ்.ஆர்.எம்.சி, கோடம்பாக்கம், சேலையூர், குமரன் நகர், திருவேற்காடு, ஐஸ்ஹவுஸ் உட்பட சென்னையின் பல காவல் நிலையங்களில் இதேபோல முதாட்டிகளை ஏமாற்றி நகைகளை திருடிச் சென்ற வழக்குகள் 25-க்கும் மேல் உள்ளது தெரிய வந்தது. கடந்த 2019ஆம் ஆண்டு அமைந்தகரையில் ஒரு மூதாட்டியை ஏமாற்றி நகை பறிக்கும் போது சுதாரித்து தப்பிக்க முயன்ற மூதாட்டியை தாக்கி அவரிடமிருந்து நகையை பறித்த வழக்கில் திருமலை சிறைக்குச் சென்று இந்த ஆண்டு ஜனவரி மாதம் 13ம் தேதி சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார். சிறையில் இருந்து வெளியே வந்த அவர் மீண்டும் தனியாக நடந்து செல்லும் முதாட்டிகளை குறிவைத்து நகை பறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளார். குறிப்பாக ஜனவரி மாதம் 13ஆம் தேதி இருந்து இந்த மாதம் வரை 15 நகை திருட்டு சம்பவங்களில் கைதான திருமலை ஈடுபட்டுள்ளது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சிறையில் ஜாமினில் வெளியே வந்த திருமலை 27 நாட்களில் 15 நகை திருட்டு சம்பவங்களில் சர்வசாதாரணமாக ஈடுபட்டுள்ளது காவல்துறையினரையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. திருடிய நகைகளை  டி.பி.சத்திரத்தைச் சேர்ந்த தனது பெண் தோழியிடம் கொடுத்து வைத்திருந்தது தெரிந்தது. கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 40 கிராம் நகைகளை பறிமுதல் செய்தனர். கைதான திருமலையை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.