மகள் செல்போனில் விளையாடியதை கண்டித்ததால் தம்பியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்த அண்ணனை போலீசார் கைது செய்தனர்.
சென்னை முகப்பேர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் ராசு (32). இவர் மெட்ரோ வாட்டரில் ஒப்பந்ததாரராக வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கனகா என்ற மனைவியும், மகாலட்சுமி(5) என்ற மகளும் உள்ளனர். மகள் மகாலட்சுமி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 1 ஆம் வகுப்பு படித்து வருகிறார். ராசுவும் அவரது தம்பி சந்திரன் என்ற விக்கி(19)யும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கூலி வேலை பார்த்து வந்த விக்கி நேற்று இரவு மதுபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரது அண்ணன் மகள் மகாலட்சுமி செல்போனில் விளையாடி கொண்டிருந்தாகக் கூறப்படுகிறது.
இதனைப் பார்த்த விக்கி உடனே குழந்தை மகாலட்சுமியிடம் இருந்து செல்போன் பறித்ததுடன் அவரை கண்டித்துள்ளார். உடனே குழந்தை மகாலட்சுமி அழுதுகொண்டே தந்தை ராசுவிடம் சென்றிருக்கிறாள். அப்போது ராசு, குழந்தையிடம் ஏன் அழுகிறாய் என கேட்டதற்கு விக்கி அடித்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதில் கோபமடைந்த ராசு, தம்பி விக்கியிடம் சென்று எதற்காக குழந்தையை அடித்தாய்? ஏன்? எனக் கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது.
அப்போது ராசு விக்கியை அடித்து உதைத்ததுடன் பெல்ட்டால் விக்கியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். இதில் சந்திரன் என்ற விக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து அங்கு வந்த நொளம்பூர் போலீசார் விக்கியின் உடலை கைபற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கொலைவழக்கு பதிவுசெய்து அண்ணன் ராசுவை போலீசார் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.