எடப்பாடியில் எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளரை கடத்த முயற்சித்த வட மாநிலத்தைச் சேர்ந்த 5 பேரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி பயணியர் மாளிகை முன்பு எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருபவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கோபி (35). இவரது அத்தை மகன் பரத் என்பவர் அதே மாநிலத்தைச் சேர்ந்த அர்ஜுன் ராம் (29), யஸ்வந்த் (22), மகேந்திர குமார் (26), அமர்சிங் (27), தனராம் (35) ஆகிய 5 பேரிடம் சுமார் ஆறு லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு தலைமறைவாகியுள்ளார்.
இந்நிலையில் தலைமறைவாகியுள்ள பரத் எடப்பாடியில் உள்ள தனது உறவுக்காரரான கோபி வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வதாக கிடைத்த தகவலை அடுத்து எடப்பாடிக்கு வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த ஐந்து பேரும் பரத்தை ஒப்படைக்கும்படி கேட்டுள்ளனர் அதற்கு கோபி மறுக்கவே அவர்கள் 5 பேரும் கோபியை அடித்து ஸ்கார்பியோ காரில் கடத்திச் செல்ல முயற்சி செய்துள்ளனர்.
இதையடுத்து கோபி சத்தம் போடவே அருகில் இருந்த பொதுமக்கள் அங்கு கூடி கார் முன்புற கண்ணாடியை உடைத்து, கடத்த முயற்சி செய்த ஐந்து பேரையும் பிடித்து எடப்பாடி காவல் நிலையத்தில் ஒப்டைத்தனர். இதைத் தொடர்ந்து 5 பேரையும் கைது செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.