டெல்லி கொலை ட்விட்டர்
குற்றம்

ரூ.350 பணத்துக்காக வாலிபரை பலமுறை குத்திக்கொன்ற சிறுவன்.. பிணத்தின்மீது டான்ஸ்.. டெல்லியில் பயங்கரம்

டெல்லியில் 16 வயது சிறுவன் ஒருவன், ரூ.350 பணத்துக்காக 18 வயது வாலிபரை கொடூரமாக கத்தியால் குத்திக் கொன்றுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Prakash J

டெல்லியில் 16 வயது சிறுவன் ஒருவன், ரூ.350 பணத்துக்காக 18 வயது வாலிபரை கொடூரமாக கத்தியால் குத்திக் கொன்றுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றி டெல்லி போலீசார், வடகிழக்கு டெல்லியின் வெல்கம் பகுதியில் உள்ள ஜந்தா மஸ்தூர் காலனியில் கடந்த நவம்பர் 21-ஆம் தேதி இரவு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அன்றைய தினம் இரவு சுமார் 11.15 மணியளவில் 18 வயதுடைய வாலிபர் ஒருவர் வெல்கம் பகுதியில் உள்ள ஜந்தா மஸ்தூர் காலனியில் இறந்துகிடப்பதாக எங்களுக்கு தகவல் வந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார், ரத்தவெள்ளத்தில் கிடந்த வாலிபரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையும் படிக்க: இலவசத்துக்கு எதிராக பேசும் பாஜக, தேர்தலில் ஏன் இலவசங்களை அள்ளிவீசுகிறது? இரட்டை வேடம் போடுகிறதா?

இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. சம்பவம் நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவின் பதிவுகள் கிடைத்துள்ளன.

சிசிடிவி காட்சிகளில், 18 வயதுடைய வாலிபரை சிறுவன் ஒருவன் கத்தியால் குத்தி இழுத்து வரும் காட்சிகள் பதிவாகியிருந்தன. மேலும் அந்த வாலிபர் இறந்ததை உறுதிசெய்ய அவரது கழுத்தில் சிறுவன் பலமுறை குத்தியதுடன், ஒருகட்டத்தில் அந்த சடலத்தின் மீது ஏறி நின்று நடனம் ஆடியுள்ளான்.

வாலிபரிடம் இருந்த பணத்தைத் திருடும்போது தடுத்ததே கொலைக்கான காரணம் என்று கூறப்படுகிறது. அவர் இறந்தபிறகு அவர் வைத்திருந்த ரூ.350 ரூபாயை எடுத்துள்ளான். சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். அவனிடம் கொலைக்கான காரணம் பற்றி விசாரணை நடத்தப்படுகிறது. இந்த சம்பவத்தின்போது சிறுவன் போதையில் இருந்துள்ளான்” எனத் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த குற்ற வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கும் சிறுவன், கடந்த ஆண்டு ஒரு கொலை வழக்கில் தொடர்புடையவர் என போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: ‘ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன்மேலே’-உலகிற்கு ஊக்கத்தை தந்த ஊன்றுகோல்; உவமைக் கவிஞர் சுரதா பிறந்தநாள்