போதைப் பொருட்கள் பறிமுதல் - 3 பேர் கைது pt desk
குற்றம்

பெங்களூரு டூ கோவை: காரில் கடத்திச் செல்லப்பட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் - 3 பேர் கைது

ஓமலூர் அருகே போதை மற்றும் புகையிலை பொருட்களை கடத்திச் சென்றதாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

webteam

செய்தியாளர்: தங்கராஜூ

சேலம் மாவட்டம் ஓமலூரில் போதைப் பொருட்கள் கடத்தலை தடுக்க போலீசார் தொடர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், பெங்களூரில் இருந்து தீவட்டிப்பட்டி வழியாக சேலத்திற்கு புகையிலை பொருட்களை சிலர் கடத்திச் செல்வதாக ஓமலூர் டி.எஸ்.பி சஞ்சீவ்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட காரை கண்டுபிடிக்குமாறு ஓமலூர் உட்கோட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.

Police station

இதையடுத்து தீவட்டிப்பட்டி போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நம்பர் பிளேட் இல்லாமல் வந்த கார் ஒன்று, போலீசாரை பார்த்ததும் நிற்காமல் வேகமாக சென்றது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த காரை விரட்டிச் சென்று பிடித்து சோதனை செய்தனர். அப்போது காருக்குள் மூட்டை மூட்டையாக போதை மற்றும் புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து காருடன் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து தீவட்டிப்பட்டி காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்று ஒப்படைத்தனர்.

இதைத் தொடர்ந்து காருடன் 260 கிலோ எடையுள்ள சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்களையும், 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காரையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து பெங்களூரில் இருந்து புகையிலை பொருட்களை கோவைக்கு கடத்தி சென்ற ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மாணிக்சந்த், மீதேஷ்பாடியார், மங்கள்ராம் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.