சென்னையில் மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை சப்ளைசெய்த கும்பலை பிடித்தது கோடம்பாக்கம் போலீஸ். இளம்பெண் தலைமையில் செயல்பட்ட அந்த போதை மாத்திரை கும்பல் சிக்கியது எப்படி? இதில் பார்க்கலாம்.
சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின் அடிப்படையில் DAD (Drive Against Drungs) ஆப்பரேஷ் மூலம் சென்னையில் போதை வஸ்துக்கள் விற்பனை மற்றும் பயன்பாட்டை ஒழிக்க காவல்துறையினர் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கோடம்பாக்கம் பகுதியில் மாம்பலம் உதவி ஆணையர் பாரதிராஜா தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த போலீசார் அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த நித்தீஷ் என்பவனைப் கைதுசெய்து அவனிடமிருந்து 1.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
முன்னதாக அவனிடம் நடத்திய விசாரணையின்போது போதை மாத்திரை விற்பனை தொடர்பான தகவல் போலீசாருக்கு தெரியவந்தது. அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் கோடம்பாக்கம், ட்ரஸ்டுபுரம் மைதானம் உள்ளிட்ட குறிப்பிட்ட இடங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரிந்த இருவரைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவ்விருவரும் அசோக் நகரைச் சேர்ந்த கிஷோர் மற்றும் கே.கே நகரைச் சேர்ந்த கிஷோர் குமார் என்பது தெரியவந்தது.
மேலும், அவர்களிடம் நிறைய மாத்திரைகள் இருப்பதைக் கண்டறிந்த போலீசார் அவற்றை சோதனைசெய்து பார்த்தபோது அவை அனைத்தும் டைடால், நைட்ரோவிட் போன்ற வலி நிவாரணி மாத்திரைகள் மற்றும் தூக்க மாத்திரைகள் என்பதும், அவற்றை போதைக்காக பயன்படுத்த விற்பனை செய்யப்படுவதும் விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து அவ்விருவரையும் பிடித்து விசாரித்த போலீசார், அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் கொத்தவால் சாவடி பகுதியில் இதேபோல வலி நிவாரணி மாத்திரைகள், தூக்க மாத்திரைகள் மற்றும் கருக்கலைப்பு மாத்திரைகள் ஆகியவற்றை சட்டவிரோதமாக விற்பனை செய்துவந்த பூந்தமல்லியைச் சேர்ந்த ராஜேஷ்வரி (22) என்ற பட்டதாரிப் பெண் உட்பட கொத்தவால் சாவடி பகுதியைச் சேர்ந்த பூங்குன்றன், கோகுல், மற்றும் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ்வரியின் காதலன் முத்துப்பாண்டி (21) ஆகிய 4 பேரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்ட பட்டதாரிப் பெண் ராஜேஷ்வரிதான் மூளையாக செயல்பட்டு இக்கும்பலுக்கு தலைவியாக இருந்தது தெரியவந்தது. மேலும், ராஜேஷ்வரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தான் வாங்கி வைத்திருந்த கருக்கலைப்பு மாத்திரைகளில், தான் பயன்படுத்தியது போக மீதமுள்ள மாத்திரைகளை கல்லூரி மாணவிகள் உள்ளிட்டோருக்கு அதிக விலைக்கு விற்பனை செய்ததும், பின்னர் அதே வழியை வாடிக்கையாக்கி கருக்கலைப்பு மாத்திரைகள், வலி நிவாரணி மாத்திரைகள் மற்றும் தூக்க மாத்திரைகளை விற்பனை செய்தால் நல்ல லாபம் கிட்டும் என எண்ணி திட்டம் தீட்டியதும் தெரியவந்தது.
பின்னர் பப்ஜி விளையாட்டில் தனக்கு 2 ஆண்டுகளுக்கு முன் அறிமுகமான பூங்குன்றனிடம் தனது திட்டத்தை கூறிய ராஜேஷ்வரி அவருடன் சேர்ந்து டெல்லியில் உள்ள போதை மாத்திரை விற்பனை செய்யும் பெயர் தெரியாத முக்கியப் புள்ளியிடம் இருந்து கொரியர் ஆர்டர் மூலம் கருக்கலைப்பு, வலி நிவாரணி மற்றும் தூக்க மாத்திரைகளை வரவழைத்து அவற்றை கொத்தவால் சாவடியில் உள்ள பூங்குன்றனின் வீட்டில் பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்ததும், வியாபாரத்தில் லாபம் லட்சங்களாக வரத்தொடங்கிய நிலையில், ராஜேஷ்வரியின் உறவினரான முத்துப்பாண்டி ராஜேஷ்வரியை அணுகி காதலிப்பதாகக் கூறி பழகியதும், வியாபாரத்தை பெருக்க நினைத்த ராஜேஷ்வரி பின்னர் முத்துப் பாண்டியையும் தங்களுடன் இணைத்துக் கொண்டு மாத்திரை விற்பனையில் ஈடுபட்டதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து பூங்குன்றனின் அறையில் தங்கி வந்த கோகுல், இவர்களிடம் மாத்திரைகள் வாங்கி வந்த கிஷோர் மற்றும் கிஷோர் குமார் ஆகியோர் இவர்களிடம் மாத்திரையை வாங்கி அதை இன்னும் அதிக லாபத்திற்கு வெளியில் விற்பனை செய்து வந்ததும், போதைக்காக பயன்படுத்தும் இம்மாத்திரை விற்பனை மூலம் அதிக லாபம் சம்பாதித்து வந்ததும் தெரியவந்தது. வாடிக்கையாளர்களை வாட்ஸ்-ஆப் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அணுகும் இக்கும்பல் மாத்திரைகளுக்கு விலைபேசி G-Pay, Pay-TM மூலமாக பணத்தைப் பெற்றுக்கொண்டு கொரியர் மூலமாகவும், நேரடியாகவும் தேவைப்படும் மாத்திரைகளை விற்பனை செய்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
குறிப்பாக டெல்லியில் இருந்து 100 மாத்திரைகளை 8 ஆயிரம் ரூபாய்க்கு ராஜேஷ்வரி, பூங்குன்றன் ஆகியோர் வாங்கி அதை கோகுல், கிஷோர், கிஷோர் குமார் போன்றோருக்கு 10 மாத்திரைகள் 2500 ரூபாய் வைத்து விற்பனை செய்ததும், அதேபோல கோகுல் உள்ளிட்ட மூவரும் அதை வெளியில் 3 ஆயிரம் முதல் 3500 ரூபாய் வரை விற்பனை செய்து லாபத்தை ஈட்டியதும் இதுவரை ஆயிரக்கணக்கில் மாத்திரைகளை இவர்கள் அனைவரும் விற்பனை செய்துள்ளதையும் போலீசார் வாக்குமூலமாக பெற்றுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து 6 பேரையும் கைதுசெய்த போலீசார் அவர்களிடம் இருந்து பதுக்கி வைக்கப்பட்ட 7,530 டைடால் மற்றும் நைட்ரோவிட் மாத்திரைகள், 4 லட்சத்து 42 ஆயிரம் பணம் மற்றும் 3 இருசக்கர வாகனங்கள், லேப்-டாப், ஆப்பிள் டேப் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் தமிழகம் மட்டுமல்லாமல் வேறு பல மாநிலங்களிலும் இந்த போதை மாத்திரை விற்பனை கும்பல் படர்ந்துள்ளதால் அவர்கள் யாரென கண்டறியவும், டெல்லியில் இருந்து அனைவருக்கும் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வரும் கிங்-பின் யார் என்பதை கண்டுபிடித்து அவனை கைது செய்யவும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
- சுப்ரமணியன்