பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மருமகள் மெரினா, தனது வீட்டில் சிறுமி ஒருவரை வீட்டு வேலைக்காக அழைத்துச் சென்று கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக திருவான்மியூர் மகளிர் காவல் நிலையத்தில் எஸ்சி எஸ்டி உட்பட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
”மெரினா தனது குடும்பத்துடன் மும்பை சென்றபோது, குழந்தைக்கு உணவு தயாரித்துக் கொடுப்பதில் தாமதமானதால் ஊர் திரும்பிய பின்பு என்னை துன்புறுத்தி திட்டினார்கள். அவர்களது குழந்தையின் முன்பே அடித்ததார்கள். குழந்தை தப்பாக நினைக்கக் கூடாது என்பதற்காக பாட்டுப் போட்டு என்னை ஆடச் சொன்னார்கள்” என அந்தச் சிறுமி கூறியுள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
”எனக்கு சமைக்க துவைக்க தெரியாதுன்னு சொன்னால் பச்சை மிளகாயை கடித்து சாப்பிட சொல்லி துன்புறுத்தினார்கள். எங்கள் அம்மாவை பார்த்து ஏழு மாதங்கள் ஆகிவிட்டது என சொன்னதற்கு டிரஸ் இல்லாமல் அடித்து துன்புறுத்தினார்கள்.
மூன்று வருடம் இங்குதான் வேலை பார்க்கணும் இல்லையென்றால் எனது அம்மா மீதும் தம்பி மீதும் நடவடிக்கை எடுத்துக் கொள்ளலாம் என எழுதி வாசித்துக் காண்பித்து கையெழுத்திடச் சொன்னார்கள். அதேபோல், அடிக்கடி ஜாதி பெயரை சொல்லி அடித்து துன்புறுத்தினார்கள். பொங்கல் விடுமுறைக்காக கடந்த 16ஆம் தேதி எங்க அம்மாவிடம் சென்றபோது நடந்த அனைத்தையும் கூறினேன்” என்று குறிப்பிட்டுள்ளார் சிறுமி.
இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கிடைத்து திருவான்மியூர் மகளிர் காவல் நிலையத்தில் இருந்து நேரில் வந்து விசாரித்ததாகவும் மேற்கண்ட அனைத்தும் அவர்களிடம் கூறியதாகவும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.