குற்றம்

முதல்வர் ஸ்டாலினை அருவருக்கத்தக்க வகையில் விமர்சித்த நபரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

முதல்வர் ஸ்டாலினை அருவருக்கத்தக்க வகையில் விமர்சித்த நபரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

Veeramani

முதலமைச்சர் ஸ்டாலினை அருவெறுக்கத்தக்க வார்த்தைகளால் விமர்சித்தவருக்கு முன் ஜாமீன் வழங்க ஆரணி தாலுகா காவல்துறை தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவித்ததையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த வேலப்பாடியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து முகநூலில் அவதூறு கருத்துக்களை பதிவு செய்து பரப்பியதாக ஆரணி தாலுகா காவல் நிலையத்தில் ரவி என்பவர் கடந்த மாதம் புகார் அளித்திருந்தார்.



அதில் பதிவான வழக்கில் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் செந்தில்குமார் மனுத்தாக்கல் செய்திருந்தார். தான் அதுபோன்ற செயல்களில் ஈடுபடவில்லை என்றும், தனிப்பட்ட விரோதம் காரணமாக அளிக்கப்பட்ட புகாரில் வழக்குப்பதிவு செய்யபட்டதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதி வி.சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர். முனியப்பராஜ் ஆஜராகி தமிழக முதலமைச்சரை தரந்தாழ்ந்தும், அருவெறுக்கத்தக்க வார்த்தைகளாலும் விமர்சித்துள்ளதாலும், விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளதாலும் முன் ஜாமீன் வழங்கக்கூடாது என வாதிட்டார்.



இதையடுத்து மனுவை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கபட்டதை ஏற்று நீதிபதி, முன் ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து செந்தில்குமாரை கைது செய்யும் நடவடிக்கையில் ஆரணி தாலுகா காவல் நிலையத்தினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.