வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது pt desk
குற்றம்

திண்டுக்கல்: வழிப்பறியில் ஈடுபட்டதாக இருவர் கைது – தப்பமுயன்ற ரவுடிக்கு காலில் எலும்பு முறிவு

திண்டுக்கல்லில் வழிப்பறியில் ஈடுபட்ட டைல்ஸ் சாகுல் என்ற ரவுடி போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற போது கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

PT WEB

செய்தியாளர்: காளிராஜன்.த

திண்டுக்கல், காந்திஜி புதுரோடு, சிவன் கோயில் அருகே சல்மான் முகமது என்பவர் நடந்து சென்றுள்ளார். அப்போது, அந்த வழியாக வந்த டைல்ஸ் சாகுல் மற்றும் தாஜ் ஆகிய இருவரும் இவருக்கு கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்து உயிர் பயத்தை ஏற்படுத்தி பணம் பறிக்க முயன்றதாக தெரிகிறது. இதுதொடர்பாக சல்மான் முகமது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தப்ப முயன்ற ரவுடிக்கு கால் முறிவு

இதையடுத்து அந்த புகாரின் பேரில் தெற்கு காவல் நிலைய போலீசார், இருவரையும் பிடிக்கச் சென்றனர். அப்போது டைல்ஸ் சாகுல் போலீஸாரிடமிருந்து தப்பியோட முயற்சித்து கீழே விழுந்துள்ளார். இதில் அவரது வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவரை மீட்ட போலீசார் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கே அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் தாஜை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். டைல்ஸ் சாகுல் மீது 2 கொலை வழக்கு, 2 கொலை முயற்சி, மேலும் ஆள் கடத்தல் மற்றும் கட்டப்பஞ்சாயத்து என 13க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.