குற்றம்

முன்விரோதம் காரணமாக வீட்டை சூறையாடிய மர்ம கும்பல் - இருவர் கைது

முன்விரோதம் காரணமாக வீட்டை சூறையாடிய மர்ம கும்பல் - இருவர் கைது

kaleelrahman

நிலக்கோட்டை அருகே ஆயுதங்களுடன் வீட்டை சூறையாடிய கும்பல் கார் கண்ணாடி உடைப்பு 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள குல்லிசெட்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அருண் குமார், அஜித் குமார் மற்றும் இவர்களது நண்பர்களான மதுரை தத்தனேரியைச் சேர்ந்த குரு, பிரசாந் ஆகிய 4 பேரும் சென்னையில் கோயம்பேடு பூ மார்க்கெட்டில் பணிபுரிந்தனர். அப்போது நண்பர்களுக்குள் மோதல் ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது.

இந்த மோதல் முன்விரோதம் அவரவர் சொந்த ஊர் திரும்பிய போதும் தொடர்கதையாகியுள்ளது. இதன் தொடர்ச்சியாக குருவின் நண்பர்கள் 10க்கும் மேற்பட்டோர் குல்லிசெட்டிபட்டி கிராமத்தில் உள்ள அஜித் குமாரை தேடி ஆயுதங்களுடன் வந்துள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக அருண்குமார் இருந்துள்ளார். ஆட்டோவில் வந்த மர்ம கும்பல் கிராமத்துக்குள் புகுந்து ஆயுதங்களுடன் ரகளையில் ஈடுபட்டுள்ளது.

இதையடுத்து அஜித் குமார் வீட்டுக்குச் சென்ற கும்பல் அங்கிருந்த இருந்த சேர் மற்றும் பொருள்களை அடித்து நொறுக்கியுள்ளனர். அஜித் வீட்டில் இல்லாத ஆத்திரத்தில் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம், கார் ஆகியவற்றை அடித்து நொறுக்கியது. மர்ம கும்பல் அட்டகாசத்தில் ஈடுபடுவதை அறிந்த ஊர் பொதுமக்கள் ஒன்று திரண்டு ரகளையில் ஈடுபட்டவர்களை விரட்டியுள்ளனர். இதனால் அந்த கும்பல் தப்பி ஓடியது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த நிலக்கோட்டை போலீசார், சம்பவத்தில் தொடர்புடைய 2 பேரை கைது செய்து, தப்பியோடிய மர்ம கும்பலை தேடி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து குல்லிசெட்டிபட்டி கிராமத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.