Murder case pt desk
குற்றம்

திண்டுக்கல் | மது போதையில் கத்தியால் குத்த பாய்ந்த கணவன்.. டக்கென மனைவி செய்த செயல்.. பறிபோன உயிர்!

திண்டுக்கல்லில் குடிபோதையில் தகராறு செய்த கணவனை படுகொலை செய்த மனைவியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

webteam

செய்தியாளர்: காளிராஜன்.த

திண்டுக்கல் முருகபவனம் அருகே உள்ள இந்திரா நகரில் வசித்து வந்தவர் கண்ணன் (45). இவரது மனைவி மோகனாதேவி (40). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கண்ணன், திண்டுக்கல் - பழனி சாலையில் லாரி பாடி கட்டும் ஒர்க் ஷாப்பில் வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று மாலை வேலையை முடிந்துவிட்டு மது போதையில் கண்ணன் வீட்டிற்கு வந்துள்ளார்.

Police investigate

அப்பொழுது வீட்டிலிருந்த அவரது மனைவியுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கண்ணன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மோகனா தேவியை குத்த முற்பட்டுள்ளார். அப்போது கத்தியை பிடுங்கிய மோகனா தேவி, கணவனை குத்தியுள்ளார். இதில், படுகாயமடைந்த கண்ணன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேற்கு காவல் நிலைய போலீசார், கண்ணன் உடலை கைப்பற்றிய பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார், மோகனா தேவியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.