Accused pt desk
குற்றம்

திண்டுக்கல்: போலீசாரிடம் சிக்கிய கள்ள நோட்டு கும்பல் - முக்கிய குற்றவாளி தப்பியோட்டம்

கொடைரோட்டில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த வேனை சோதனை செய்தபோது சிக்கிய கள்ள நோட்டு கும்பல், பெண் உட்பட 5 பேர் கைது செய்த போலீசார், தப்பியோடிய முக்கிய குற்றவாளியை தேடி வருகின்றனர்.

webteam

செய்தியாளர்: காளிராஜன்.த

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே மதுரை தேசிய நெடுஞ்சாலைகள் நாகையகவுண்டன்பட்டி பிரிவில் தனியாக நின்று கொண்டிருந்த ஆம்னி வேன் மீது சந்தேகம் கொண்ட அம்மைய நாயக்கனூர் ரோந்து போலீசார், வேனில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ள்னர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் வேனை சோதனையிட்டனர். அப்போது அதில், கலர் ஜெராக்ஸ் மிஷின் மற்றும் கள்ள நோட்டுகள் இருப்பது தெரியவந்தது.

Van seized

இதையடுத்து வேனில் இருந்த பெண் உட்பட ஐந்து பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள், திண்டுக்கல், மதுரை, கரூர், விருதுநகர் மாவட்டங்களில் கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விடும் கும்பல் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து வேனில் இருந்த கலர் ஜெராக்ஸ் மிஷின் மற்றும் கள்ள நோட்டு அடிப்பதற்கு பயன்படுத்தப்படும் பேப்பர் கட்டுகள் மற்றும் 26 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில், கள்ள நோட்டு கும்பலைச் சேர்ந்த திருச்செங்கோடு ரவி, விருதுநகரைச் சேர்ந்த அழகர் மற்றும் வீரமணி மதுரையைச் சேர்ந்த சுகிர்தராஜ் மற்றும் ஜெனிதா ஆகிய ஐந்து பேர் மீது வழக்குப் பதிவு செய்த அம்மையநாயக்கனூர் போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து கள்ள நோட்டு கும்பலின் தலைவனாக செயல்பட்டு வந்த விருதுநகரைச் சேர்ந்த முன்னாள் தீயணைப்பு வீரர் திருப்பதி என்பவரை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை வலையத்திற்குள் கொண்டு வந்தனர்.

Police station

இதைத் தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட திருப்பதி, அங்கிருந்து தப்பியோடிய நிலையில், அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.