குற்றம்

திண்டுக்கல்: போலீஸ் அசிஸ்டன்ட் கமிஷனர்போல் ஜீப்பில் வலம் வந்த டிப்டாப் ஆசாமி கைது

திண்டுக்கல்: போலீஸ் அசிஸ்டன்ட் கமிஷனர்போல் ஜீப்பில் வலம் வந்த டிப்டாப் ஆசாமி கைது

kaleelrahman

வத்தலகுண்டு அருகே போலி போலீஸ் அசிஸ்டன்ட் கமிஷனர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து இரண்டு டம்மி துப்பாக்கிகள் மற்றும் ஜீப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

போலீஸ் அசிஸ்டன்ட் கமிஷனர் என்று சொல்லிக்கொண்டு போலீஸ் வாகனம்போல் சைரன் வைத்த ஜீப்பில் சந்தேகத்திற்கிடமான நபர் வருவதாக பட்டிவீரன்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டோல்கேட் அருகே காத்திருந்த போலீசார், அவ்வழியே வந்த போலீஸ் வாகனத்தை மடக்கி பிடித்தனர்.

அப்போது ஜீப்பில் இருந்து இறங்கிய டிப்டாப் ஆசாமி, தான் அசிஸ்டன்ட் கமிஷனர் எனக்கூறி தன்னை மடக்கிய போலீசாரை மிரட்டி உள்ளார். இதில், சந்தேகமடைந்த போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் சொல்லியுள்ளார். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அவர், சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த விஜயன் என்பதும், அவர், போலியாக போலீஸ் அடையாள அட்டை தயாரித்து தன்னை போலீஸ் அசிஸ்டன்ட் கமிஷனர் எனக் கூறிக்கொண்டு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்குச் சென்றிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

யாரும் சந்தேகம் கொள்ள முடியாத அளவிற்கு எளிதில் நம்பிவிடும் தோரணை மற்றும் உண்மையான போலீஸ் வாகனம்போல் சைரன், வாக்கி டாக்கி என சகல வசதிகள் கொண்ட ஜீப் இவை அனைத்தையும் வைத்துக் கொண்டு உண்மையான போலீஸ் அசிஸ்டன்ட் கமிஷனர்போல் விஜயன் கடந்த சில மாதங்களாக ஜாலியாக உலா வந்தது தெரியவந்துள்ளது.

போலி அசிஸ்டன்ட் கமிஷனர் வேடம் போட்டுள்ள விஜயன், ஏதேனும் ஏமாற்று வேலையில் ஈடுபட்டுள்ளரா என தொடர் விசாரணை மேற்கொண்ட போலீசார் அவரிடமிருந்து இரண்டு டம்மி துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் பயன்படுத்திய போலியான போலீஸ் ஜீப்பையும் பறிமுதல் செய்த பட்டிவீரன்பட்டி போலீசார், விஜயன் மீது வழக்குப்பதிவு செய்து நிலக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.