திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே தாமரைப்பாடியில், தனியாருக்கு சொந்தமான ஏ.டி.எம் உள்ளது. கடந்த 29 ஆம் தேதி ஏ.டி.எம். அறைக்குள் புகுந்த மர்ம நபர் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை உடைத்து விட்டு, ஏ.டி.எம் இயந்திரத்தின் முன் பகுதியில் கேமரா வைக்கப்பட்டிருக்கும் இடத்தை அட்டையால் மறைத்து விட்டு, இயந்திரத்தை கம்பியால் உடைத்து பணத்தை கொள்ளை அடிக்க முயற்சி செய்துள்ளார்.
ஆனால் பணம் இருக்கும் லாக்கரை உடைக்க முடியாததால் அப்படியே விட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதனால் ஏ.டி.எம் இயந்திரத்திற்குள் இருந்த 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் அதிர்ஷ்டவசமாக தப்பியது. இது குறித்து வடமதுரை போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் இன்று வடமதுரை ஆஞ்சநேயர் கோவில் அருகே உள்ள தனியார் ஏ.டி.எம். அறையை நோட்டமிட்டபடி இளைஞர் ஒருவர் நீண்ட நேரமாக நின்றிருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்து அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
அவர், விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள ஒத்தப்பட்டியைச் சேர்ந்த கோபிநாத் பிரபு என்பதும், அவர், தாமரைப்பாடியில் உள்ள ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதும், அவர் மீது ஏற்கனவே பல திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து கோபிநாத் பிரபுவை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.