பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் மற்றும் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தருமபுரியில் நடைபெற்றது.
தருமபுரி மாவட்டத்தில் நல்லம்பள்ளி பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரி மாணவிகளிடம் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் மற்றும் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.கலைச்செல்வன் கலந்து கொண்டு மாணவிகளிடையே உரையாற்றினார்.
அப்பொழுது பேசிய அவர், “தற்பொழுது இணையதளங்கள், சமூக வலைதளங்கள், செல்போன் உள்ளிட்டவை அனைவருக்கும் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. இது தவிர்க்க முடியாத ஒன்றுதான் என்றாலும், மாணவிகள் இவற்றை பெரிதும் தங்கள் கல்விக்காக அதிக அளவில் பயன்படுத்த வேண்டும்.
முடிந்தவரை ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தங்கள் புகைப்படங்களை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் நடைபெறும்போது பெண்களைப் பாதுகாக்க பிரத்யேக எண்கள் காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ளன. அது குறித்த விழிப்புணர்வு மாணவிகளிடையே அதிக அளவில் இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு பெண் கல்வி கற்கையில், அது அவரையும் அவரது குடும்பத்தையும் எந்த அளவிற்கு முன்னேற்றம் பாதையில் கொண்டு செல்லும் என்பதை தெரிந்து கொண்டு, கல்வியில் மட்டுமே இந்த வயதில் பெண்கள் கவனத்தை செலுத்த வேண்டும் வேண்டும்.
இந்திய அளவில் நாளொன்றுக்கு சைபர் கிரைம் குற்றத்தில் ஈடுபடும் திருடர்களால் அரங்கேற்றப்படும் குற்றச் சம்பவங்கள் மூலம், சுமார் 100 கோடி ரூபாய் வரை திருடப்படுகிறது. எப்போதுமே சைபர் கிரைம் குற்றங்கள் நடைபெறும்போது உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தால், குற்றச் சம்பவங்கள் தடுக்கப்படுவதோடு பணத்தை இழந்தவர்களுக்கு பணமும் திரும்பப் பெற்று தரப்படும். மேலும் செல்போனில் வரும் தவறான அழைப்புகள், ஆஃபர்கள் உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும்” என கலைச்செல்வன் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் சைபர் கிரைம் பிரிவைச் சேர்ந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் புஷ்பராஜ், துணை காவல் கண்காணிப்பாளர் ரவிக்குமார் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த அலுவலர்கள் உள்ளிட்டோர் மாணவிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசினர்.
சமீபத்திய செய்தி: தேசிய கல்விக் கொள்கை வழக்கு: மாநில அரசின் கோரிக்கையும், மத்திய அரசின் பதில் மனுவும்!