கணவன் மனைவி கைது pt desk
குற்றம்

பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவருக்கு பரிகாரம் செய்வதாக கூறி ரூ.8 லட்சம் மோசடி – கணவன் மனைவி கைது

ஆன்லைனில் ஜாதகம் பார்ப்பதாக கூறி ரூ.8 லட்சம் மோசடி செய்த கணவன் மனைவியை தருமபுரி சைபர் க்ரைம் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

PT WEB

செய்தியாளர்: சே.விவேகானந்தன்

தருமபுரி அடுத்த வெங்கட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுபா என்பவர் பெங்களூரில் வசித்து வருகிறார். இவரது வாட்ஸ் அப் செயலிக்கு ஆன்லைன் மூலம் ஜோதிடம் பார்ப்பதாக விளம்பரம் வந்துள்ளது. இதைப் பார்த்த அவர், அதில் குறிப்பிடப்பட்டிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது பேசிய சொர்ணகுமார் (எ) விஷ்ணுராஜன், தான் ஆன்லைன் மூலமாக ஜாதகம் பார்ப்பதாக சுபாவிடம் தெரிவித்துள்ளார்.

Arrested

இதையடுத்து சுபா, தன்னுடைய கணவர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதைக் கேட்ட விஷ்ணு ராஜன், சுபாவின் கணவருக்கு ஜாதகம் பார்ப்பதாக கூறிய நிலையில், “உங்கள் கணவருக்கு செய்வினை வைக்கப்பட்டுள்ளது. அதை எடுக்க பரிகாரம் செய்ய வேண்டும். அப்படி செய்தால் உங்கள் கணவர் குணமாகி விடுவார்” எனக்கூறி, அதற்காக ரூ.8 லட்சம் பணத்தை ஆன்லைன் மூலம் பெற்றுள்ளார்.

பின்னரே சுபாவிற்கு இவை யாவும் போலி என தெரிந்துள்ளது. தொடர்ந்து சுபா, தருமபுரி சைபர் க்ரைமில் புகார் அளித்துள்ளார். பின் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன் உத்தரவின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், மேற்பார்வையில் தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடிவந்தனர். இதைத் தொடர்ந்து சென்னையில் ஜாதகம் பார்த்து வந்த விஷ்ணுராஜன் மற்றும் அவரது மனைவி வெங்கடேஸ்வரி (எ) ஸ்ரீதேவி, ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைது செய்து, தருமபுரி அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

SP Office

விசாரணையில் அவர்கள் இருவரும் ஆன்லைன் மூலம் விளம்பரம் செய்து, பணத்தை ஏமாற்றியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து விஷ்ணுராஜன் மற்றும் அவரது மனைவி ஸ்ரீதேவி ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.