தருமபுரி மாவட்டம் காரியமங்கலம் அருகே கடந்த செப்டம்பர் 28 ஆம் கர்நாடகாவில் இருந்து கோவைக்கு நகைகள் வாங்கிச் சென்ற பிரசன்னா என்பவரை பின்தொடர்ந்து வந்த கொள்ளை கும்பல், காரிமங்கலம் அடுத்த பூலாம்பட்டி அருகே, காரை வழிமறித்து கடுமையாக தாக்கிவிட்டு காருடன் 5 கிலோ தங்கம் ₹60 லட்சம் பணம் ஆகியவற்றை கடத்திச் சென்றனர்.
இந்நிலையில் பிரசன்னா, காரிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி மற்றும் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜேசுதாஸ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த வழக்கு தொடர்பாக கரூர் டிஎஸ்பி புகழேந்தி கணேஷ் தலைமையில் 10 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடைபெற்று வந்தது.
காரை மட்டும் கொள்ளையர்கள் விட்டுச் சென்ற நிலையில்,. தொடர்ந்து தனிப்படை போலீசார் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் இந்த கொள்ளை சம்பவத்தில் 15 பேர் ஈடுபட்டதும் அவர்கள் அனைவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சுற்றித் திறந்த குற்றவாளிகளை 10 தனிப்படையினர் பின் தொடர்ந்து வந்தனர்.
அப்போது சென்னையில் 5.9 கிலோ தங்கம் மற்றும் 19.5 லட்சம் பணம் பிடிபட்டது. இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த முக்கிய குற்றவாளிகளான சுஜித், சரத், பிரவீன் தாஸ் ஆகிய மூன்று பேரை கோயம்புத்தூரில் கைது செய்தனர். இதன் தொடர்ச்சியாக சிகாபுதீன், சைனு, அகில், சதீஷ் ஆகியோரை கைது செய்தனர்.
இந்நிலையில், நேற்று இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளான அந்தோணி மற்றும் சீரியல் மேத்யூ ஆகிய இருவரையும் காவல்துறையினர் சென்னையில் கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து ஒன்பது குற்றவாளிகளிடம் இருந்து நான்கு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து கோவை மண்டல ஐஜி பவானி சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி ஆகியோர் காரிமங்கலம் காவல் நிலையத்திற்கு நேரில் வந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை பார்வையிட்டனர். பின்னர் திறம்பட செயல்பட்ட தனிப்படை காவல் துறையினருக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.