குற்றம்

தருமபுரி: மின்வேலியில் சிக்கி 3 யானைகள் பலி – விவசாயி கைது

தருமபுரி: மின்வேலியில் சிக்கி 3 யானைகள் பலி – விவசாயி கைது

webteam

பாலகோடு அருகே மின் வேலியில் சிக்கி மூன்று பெண் யானைகள் பலியான சம்பவம் தொடர்பாக விவசாயியை கைது செய்து வனத் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா மாரண்டஹள்ளி அருகே உள்ள அத்திமுட்லு - சங்கராபுரம் அடுத்த காளிகவுண்டர் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் என்பவரது மகன் சக்தி. பெங்களூருவில் வசித்து வரும் இவருக்குச் சொந்தமாக 22 ஏக்கரில் தென்னந்தோப்பு உள்ளது. இந்த தென்னந்தோப்பை, பாலகோடு தாலூகா கெண்டேனஹள்ளி பாறைக்கொட்டாய், கூலியப்ப கவுண்டர் என்பவரின் மகன் முருகேசன் என்பவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார்.

இந்நிலையில் விவசாய நிலம் வனப் பகுதியையொட்டி உள்ளதால், வன விலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க விவசாய நிலத்தைச் சுற்றி மின்வேலி அமைத்திருந்தார். இதனையடுத்து அப்பகுதியில் நேற்று இரவு மூன்று பெண் யானைகள், 2 குட்டி யானைகளுடன் உணவு தேடி இந்த விவசாய நிலத்திற்குள் நுழைய முயன்றுள்ளது. அப்போது மின்வேலியில் சிக்கி, மின்சாரம் தாக்கி மூன்று பெண் யானைகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.

இதைத் தொடர்ந்து இரண்டு குட்டி யானைகளும் தாய் உயிரிழந்த தாய் யானைகளை சுற்றிச் சுற்றி வருகிறது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து பாலகோடு வனத்துறை அதிகாரிகள், விவசாயி முருகேசனை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மூன்று யானைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.