செய்தியாளர்: சே.விவேகானந்தன்
தருமபுரி மாவட்டத்தில் கர்ப்பிணி பெண்களின் கருவின் பாலினத்தை கண்டறிந்து சட்ட விரோதமாக ஒரு சிலர் செயல்படுவதாக தர்மபுரி மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதாரத் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் சாந்தி உத்தரவுபடி கருவின் பாலினம் கண்டறியும் இடைத்தரகர்களை தொடர்பு கொண்டு கருவின் பாலினம் கண்டறிய வேண்டும் என பேசியுள்ளனர்.
இதையடுத்து தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சீங்கேரி கூட்ரோட்டில் உள்ள கார்த்தி என்பவரது வீட்டில், 2 கர்பிப்ணி பெண்களுக்கு கருவின் பாலினம் கண்டறிய பரிசோதனை செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கர்ப்பிணி பெண்களுக்கு தனியார் மருத்துவமனையில் பணியாற்றிய செவிலியர் கற்பகம் என்பவர் சட்ட விரோதமாக கருவில் உள்ள சிசுவின் பாலினம் கண்டறிந்து சொன்னபோது, மாவட்ட ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் டாக்டர் சாந்தி தலைமையிலான மருத்துவக் குழுவினர், சட்டவிரோத கருக்கலைப்பு கும்பலை சுற்றி வளைத்தனர்.
இதைத் தொடர்ந்து இடைத்தரகர் வடிவேல் மற்றும் கற்பகம் ஆகியோரை மருத்துவக் குழுவினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கற்பகம், சட்ட விரோதமாக கருவின் பாலினம் கண்டறிந்து சொல்லும் குற்றத்திற்காக மருத்துவத் துறையினர் மூலம் பிடிபட்டு, மூன்று முறை சிறை சென்றுள்ளார்.
ஆனால், மீண்டும் இந்த சட்ட விரோத செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். எனவே இதுபோன்று தொடர்ந்து சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் கற்பகம் உள்ளிட்டோரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.
சட்டங்களை கடுமையாக்கினால் மட்டுமே இதுபோன்ற சம்பவங்களை தடுக்க முடியும். இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் பென்னாகரத்திலும், ஜூலை மாதம் பெரம்பலூரிலும், தற்பொழுது மகேந்திரமங்கலத்தில் பிடித்துள்ளனர். மூன்று மாதத்தில் மூன்று கருக்கலைப்பு கும்பல்களை தருமபுரி மாவட்ட ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் சாந்தி தலைமையிலான மருத்துவக் குழுவினர் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.