பாஜக எம்.பியும் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவருவரான பிரிஜ் பூஷன் சிங் மீது, இந்திய மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர். அவர்மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சக வீராங்கனைகளோடு டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் போராட்டம் நடத்தினர்.
இருப்பினும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், நாட்டிற்காக தாங்கள் பெற்ற பதக்கங்களை கங்கை ஆற்றில் வீச முடிவுசெய்தனர் வீராங்கனைகள்.
இதையடுத்து பிரிஜ் பூஷன் மீது வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணையானது நடத்தப்பட்டது. பின் கடந்த ஜீன் 15 ஆம் தேதி இவர்மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விசாரணையை காவல்துறையினர் தொடர்ந்தனர். இந்த வழக்கு டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.
இவ்வழக்கானது கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் ஹர்ஜீத் சிங் ஜஸ்பால் முன்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது பூஷன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜீவ் மோகன் வாதாடுகையில் , “ஒரு பெண்ணை பாலியல் நோக்கமின்றி தொடுவதென்பது குற்றம் ஆகாது என்பதால், இந்தியாவில் இதுபோன்ற 354 வழக்குகள் பதிவு செய்யப்படாமல் இருக்கின்றது. இந்தியாவிற்கு வெளியே நடக்கும் இத்தகைய சம்பவங்களுக்கு வழக்குப்பதிய சிஆர்பிசியின் 188 ஆவது பிரிவின் கீழ் அனுமதி தேவைப்படுகின்றது” என்று தெரிவித்தார்.
மேலும் “பூஷனுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள பிரிவு 354A (பாலியல் துன்புறுத்தல்) வழக்கின் கீழ் செய்யப்படும் குற்றம் காலவரையறையானது. ஏன் இவ்வளவு தாமதமாக இவ்வழக்கை பதிவு செய்துள்ளனர்” என்று கேள்வி எழுப்பினார்.
அப்போது டெல்லி போலீஸ் சார்பில் அரசு வழக்கறிஞர் (ஏபிபி) அதுல் குமார் ஸ்ரீவஸ்தவா, நீதிமன்றத்தில் பிரிஜ் பூஷனை எதிர்த்து வாதிட்டார். தன் வாதத்தில் அவர் “ஐபிசியின் 354-வது பிரிவின் கீழ் (ஒரு பெண்ணின் நாகரீகத்தை சீர்குலைக்கும் நோக்கத்துடன் தாக்குதல், பாலியல் வன்கொடுமையை அதற்காக பயன்படுத்துதல்) வழக்குத் தொடரப்பட, குற்றம் சாட்டப்பட்டவரின் நோக்கங்கள் மட்டுமே காரணம்; அதைமட்டுமே பார்க்கவேண்டும் (only the intentions of the accused are important)” என்றார்.
பின் தஜிகிஸ்தானில் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியின்போது நடைபெற்ற நிகழ்வை மேற்கோள்காட்டி வாதிட்ட அவர் , ``கிடைக்கும் வாய்ப்புகளிலெல்லாம் மல்யுத்த வீராங்கனைகளை பிரிஜ் பூஷன் பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்றிருக்கிறார். அச்சமயத்தில் அவர் ஒரு மல்யுத்த வீராங்கனையிடம் தவறாகவும் நடந்து கொண்டுள்ளார். பிறகு, தந்தையை போல பழகினேன் என்று அவரிடம் கூறி இருக்கிறார். மேலும் இதுபோன்று பல வீராங்கனைகளிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார்” என்று தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களுக்குப் பின் இவ்வழக்கானது அக்டோபர் 7 ஆம் தேதிக்கு விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.