குற்றம்

டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு

டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு

webteam

நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு குற்றவாளிகளின்  மேல்முறையீட்டு மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் சொத்து தகராறில்  நரம்பியல் மருத்துவரான சுப்பையா,  கூலிப்படையினரால் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் மருத்துவர் சுப்பையாவின் உறவினரான பொன்னுச்சாமி, அவருடைய மனைவி மேரி புஷ்பம், மகன்கள் பேசில், போரிஸ், பேசிலின் மற்றும்  நண்பர்களான வில்லியம்ஸ், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், கூலிப்படையைச் சேர்ந்த ஏசு ராஜன், முருகன், செல்வபிரகாஷ், ஐயப்பன் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கில் ஐய்யப்பன் என்பவர் அப்ரூவர் ஆகினார். இந்த வழக்கில் கடந்த 2015ல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 2017ல் சாட்சிகள் விசாரணை துவங்கியது.

இந்நிலையில் வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க சுப்பையாவின் உறவினரான மோகன் சென்னை  உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த வழக்கை ஜூலை 2021ம் ஆண்டு ஜூலை 31ம் தேதிக்குள் விசாரித்து முடிக்க உத்தரவிட்டது. அதன்படி விசாரணையை முடித்து தீர்ப்பு வழங்கிய சென்னை அமர்வு நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட பொன்னுச்சாமி, மேரி புஷ்பம், வில்லியம்ஸ், ஏசு ராஜன், போரிஸ், ஜேம்ஸ் சதீஷ்குமார், செல்வ பிரகாஷ், முருகன், பேசில் ஆகிய 9 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்தார். இதில், பொன்னுசாமி, பாசில், வில்லியம், ஜேம்ஸ் சதீஷ்குமார், போரிஸ், முருகன், செல்வபிரகாஷ் ஆகியோருக்கு தூக்குத் தண்டனையும் மேரி புஷ்பம், ஏசு ராஜன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.  அதேவேளையில் அப்ரூவரான ஐயப்பன் அரசு சாட்சி என்பதால் அவருக்குத் தண்டனை விதிக்கப்படவில்லை.

இதனைத்தொடர்ந்து குற்றவாளிகள் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த வழக்கு மீதான விசாரணை கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றபோது, விசாரணை அதிகாரி தங்கள் தரப்புக்கு விசாரணை ஆவணங்களை வழங்க வேண்டும் என்ற குற்றவாளிகளில் ஒருவரான பொன்சாமி தரப்பு கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து விசாரணை ஆவணங்களை தனக்கு வழங்கக்கோரி பொன்னுசாமி உச்சநீதிமன்றத்தை நாடினார்.

இந்த மனு,  தலைமை நீதிபதி யு.யு.லலித் மற்றும் நீதிபதிகள் பீலா திரிவேதி, பி.நரசிம்மா  ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு இன்று வந்த போது, வழக்கில் பொன்னுசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்  இந்த வழக்கில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றுள்ளது, எனவே விசாரணை ஆவணங்களை தங்கள் தரப்புக்கு தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும் இந்த வழக்கில் இடைக்காலமாக உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு  விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள் ஆவணங்களை மனுதாரர் பொன்னுசாமிக்கு வழங்குவது தொடர்பான விவகாரத்தில் பதிலளிக்க தமிழக காவல் துறைக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர். மேலும் சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை விசாரிக்கலாம் எனவும், ஆனால் எந்த உத்தரவையும் பிறப்பிக்க கூடாது எனவும் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தனர்.

இதையும் படிக்கலாமே: திருமணத்தை மீறிய உறவால் நேர்ந்த துயரம்... தூங்கிக்கொண்டிருந்த அண்ணனை கொன்ற தம்பி