அனைத்து புகைப்படங்களிலும் ஆதாரங்கள் அழிக்கப்பட்டிருந்த நிலையில், ஒரே புகைப்படத்தின் மூலம் தான் ஆசிஃபா வழக்கில் உண்மை கண்டுபிடிக்கப்பட்டது.
சிறுமி ஆசிஃபா கொலை வழக்கில் காவல் துறையினர் உட்பட 8 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதில் காவல் துறையினரே குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததால் ஆசிஃபா, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட ஆதாரங்கள் அழிக்கப்பட்டிருந்தன. இந்த வழக்கை நேர்மையுடன் விசாரிக்க, குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் குமார் ஜல்லா தலமையிலான குழுவை நியமித்தார் ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முஃப்தி. பொதுவாக சிக்கல் நிறைந்த, கண்டுபிடிக்க முடியாத, சவாலான வழக்குகள் என்றால் அதை அதிரடியாக கண்டுபிடிக்கவே ரமேஷ் ஜல்லா குழு களமிறக்கப்படும். இதற்கு முன் இந்தக் குழு விசாரித்துள்ள அனைத்து வழக்குகளிலுமே, யார் என்று பாரபட்சம் பார்க்காமல் அதிரடி காட்டப்பட்டுள்ளது.
ஆசிஃபாவின் வழக்கில் விசாரணை தொடங்கிய இந்த குழு எடுத்த உடனே அதிரடியை காட்ட முடியவில்லை. ஏனெனில் அனைத்து இடங்களிலும் ஆதாரங்களை எடுப்பதில் ஏதோ சிரமும், சிக்கலும் இருந்தது. இருப்பினும் எதிர்ப்புகளை மீறி சாதுர்யமாக செயல்பட்ட காவல்துறையினர், ஆதாரங்களை சேகரிக்கத் தொடங்கினர். இதற்கு முன்னர் இந்த வழக்கை விசாரித்த போலீஸாரின் தகவல்கள் படி பர்வேஷ் குமார் என்ற 15 வயது சிறுவன் குற்றம் செய்ததாக கூறப்பட்டுள்ளது. அந்த சிறுவனிடம் விசாரித்ததில், சிறுவனும் அதையே கூறியுள்ளான்.
இந்த நிலையில் தான் வழக்கில் முக்கிய திருப்பமாக ஆசிஃபா உடலை மீட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை விசாரணைக்குழு பார்த்துள்ளது. அதில் ஒரே ஒரு புகைப்படத்தில் மட்டும், ஆசிஃபாவின் உடையில் சேறு இருப்பது தெரிந்துள்ளது. ஆனால் வேறு எந்த புகைப்படங்களிலும் சேறு இல்லை. இதை கவனத்தில் கொண்டு அதன் அடிப்படையில் விசாரித்த குழுவிற்கு, அதிர்ச்சியான உண்மைகள் தெரியவந்ததுள்ளது. சிறுமியை கோவிலில் அடைத்து வைத்து பலர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் புகைப்படத்தை தங்கள் குழு மிகவும் கவனத்துடன் கண்டுபிடித்து, அதிலிருந்து விசாரித்ததே உண்மை வெளிக்கொண்டு வந்ததற்கு முக்கிய காரணம் என ரமேஷ் கூறியுள்ளார்.