தனது முன்னாள் மனைவி மோனிகா மீது நடவடிக்கை எடுக்குமாறு இசையமைப்பாளர் டி.இமான், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். குழந்தைகளின் பாஸ்போர்ட் தன்னிடம் இருப்பதை மறைத்து புதிய பாஸ்போர்ட் வாங்கியதாக மோனிகா மீது குற்றம்சாட்டியுள்ளார் டி.இமான்.
கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2018ம் ஆண்டு மனைவி மோனிகாவிடமிருந்து விவாகரத்து பெற்ற இசையமைப்பாளர் இமான் தன் குழந்தைகளை சந்திக்க குடும்பநல நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. அப்போது இரு குழந்தைகளின் பாஸ்போர்ட்களையும் இமான் வைத்திருந்தார். இந்நிலையில், குழந்தைகளின் பாஸ்போர்ட்கள் தொலைந்து விட்டதாக தவறான தகவலை கூறி, புதிய பாஸ்போர்ட் பெற்றுள்ளார் இமானின் முன்னாள் மனைவி மோனிகா. இதனால் மோனிகாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி இமான் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தனது அந்த மனுவில், `ஏற்கனவே பாஸ்போர்ட் உள்ள நிலையில், புதிய பாஸ்போர்ட் வாங்கியது சட்டவிரோதம் என்பதால், மோனிகாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும் புதிய பாஸ்போர்ட்டை ரத்து செய்யவும் வேண்டும். இதுதொடர்பாக சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரியிடம் புகார் அளித்திருந்தேன். ஆனால் அதை விசாரித்த பாஸ்போர்ட் அதிகாரி, குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாஸ்போர்ட் மீது நீதிமன்ற உத்தரவு இல்லாமல் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று விளக்கம் அளித்தார். நான் குழந்தைகளை சந்திக்காமல் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அதற்கு வழிவகை செய்யும் வகையில், அவர்களை வெளிநாடு அனுப்புவதற்காக இப்படி தவறான தகவலை அளித்து புதிய பாஸ்போர்ட் பெற்றுள்ளார் மோனிகா’ என இமான் குறிப்பிட்டதாக தெரிகிறது.
<iframe width="640" height="360" src="https://www.youtube.com/embed/IuA39VDATvM" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>
நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், இந்த விவகாரத்தில் தலைமை பாஸ்போர்ட் அதிகாரி, மண்டல பாஸ்போர்ட் அதிகாரி, இமானின் முன்னாள் மனைவி மோனிகா ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 9ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.'
சமீபத்திய செய்தி: இன்று முதல் விற்பனைக்கு வரும் போகோ எக்ஸ் 4 ப்ரோ 5ஜி! சிறப்பம்சங்கள் என்னென்ன? முழு விவரம்!