குற்றம்

காவல்துறையை பழிவாங்க ஸ்கெட்ச்! ஒரு சைக்கிள் திருடனின் மறுபக்கம்!

Sinekadhara

சென்னையில் காவல்துறையை பழிவாங்க சைக்கிள் திருடிய இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை எழும்பூரில் உள்ள காவலர் குடியிருப்புகளில் சைக்கிள்கள் மட்டும் திருடப்படும் சம்பவம் தொடர்ந்து கொண்டே இருந்தது. இதுகுறித்த புகாரில் அங்கிருந்த சிசிடிவி காட்சியை ஆராய்ந்தது காவல்துறை. இருள் சூழ்ந்த அந்த இரவில் காவலர் குடியிருப்புக்குள் புகுந்த இளைஞர் ஒருவர், இருசக்கர வாகனங்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளை திருடிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. அதனை வைத்து குற்றவாளியை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.

ஆனால், அந்த திருடன் அத்தனை எளிதில் பிடிபடவில்லை. அதனால் நேரடியாக களத்தில் இறங்கிய காவல்துறையினர், இரவு நேரங்களில் எழும்பூர் காவலர் குடியிருப்பைச் சுற்றி சாதாரண உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, சைக்கிள் திருட வந்த அந்த இளைஞர் கையும், களவுமாக காவலர்களிடம் பிடிபட்டார். அவர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த காஜா மொய்தீன் என்பது விசாரணையில் தெரியவந்தது.

அவரையும், அவரின் கூட்டாளியான ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த கதிர் என்பவரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்கள் வேறு ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்த விசாரணையில் ஈடுபட்டனர். ஆனால், அவர்கள் காவல்துறையினரை பழிவாங்கவே, காவலர் குடியிருப்பில் உள்ள சைக்கிள்களை மட்டும் திருடியதாக கூறியது அதிகாரிகளை குழப்பத்தில் ஆழ்த்தியது.

பொதுமுடக்க காலத்தில் வேலையின்றி சுற்றிவந்த மொய்தீன் மீது, அடிதடி சம்பவம் தொடர்பாக திருவல்லிக்கேணி காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து சிறையிலடைத்துள்ளனர். சிறையிலிருந்து வெளியே வந்த அவர் காவல்துறையினரை பழிவாங்கத் துடித்துள்ளார். அதற்காக காவலர் குடியிருப்புகளில் புகுந்து, அங்கு விலையுயர்ந்த சைக்கிள்களைத் திருடியது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 9 சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளதென காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.