சம்பந்தப்பட்ட தனியார் பள்ளி முன் திரண்ட மாணவியின் உறவினர்கள் pt desk
குற்றம்

கடலூர்: தனியார் பள்ளி தலைமையாசிரியர் போக்சோவில் கைது!

பள்ளி மாணவியிடம் தனியார் பள்ளி தலைமையாசிரியர் தவறாக நடந்து கொண்டதாக பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து தலைமையாசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

webteam

செய்தியாளர்: கே.ஆர்.ராஜா

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே தனியார் மேல்நிலைப்பள்ளியொன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரிந்து வருபவர் கடலூரை சேர்ந்த எடில் பெர்ட் ஃபெலிக்ஸ் (45). இவர், மாணவி ஒருவரிடம் அத்துமீறி நடப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் சில தினங்களுக்கு முன்பு பரவியுள்ளது. இதனைப் பார்த்த அந்த மாணவியின் உறவினர்கள் மற்றும் கிராமத்து இளைஞர்கள் நேற்று மாலை பள்ளிக்குச் சென்றுள்ளனர்.

சம்பந்தப்பட்ட தனியார் பள்ளி முன் திரண்ட மாணவியின் உறவினர்கள்

அங்கு அவர்கள் தலைமை ஆசிரியர் எடில் பெர்ட் பெலிக்ஸ்-ஐ சரமாரியாக தாக்கி ஆடைகளை கிழித்து உள்ளாடையுடன் சாலைக்கு இழுத்து வந்தனர். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் விருத்தாசலம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அதன் பேரில் அங்கு விரைந்து சென்ற விருத்தாசலம் டிஎஸ்பி ஆரோக்யராஜ், சப் இன்ஸ்பெக்டர் சந்துரு மற்றும் போலீசார், தலைமை ஆசிரியரை மீட்டு பள்ளி வளாகத்திற்குள் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டதோடு, சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் “மாணவியிடம் தவறான நடந்து கொண்ட தலைமையாசிரியரை கைது செய்ய வேண்டும். மற்ற மாணவிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

சம்பந்தப்பட்ட தனியார் பள்ளி முன் திரண்ட மாணவியின் உறவினர்கள்

அதனைத் தொடர்ந்து தாசில்தார் உதயகுமார், விருத்தாசலம் டிஎஸ்பி ஆரோக்கியராஜ், நெய்வேலி டிஎஸ்பி சபியுல்லா ஆகியோர் அவர்களிடம் சமாதானம் பேசி, “இவ்விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து (இன்று) வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடத்தி அதில் முடிவெடுப்போம்” என தெரிவித்துள்ளனர். அதன்பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதைத் தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் தலைமையாசிரியரை கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர்.