குற்றம்

ஜன்னல் வழியாக தீ வைக்கப்பட்ட சிறை அதிகாரி வீடு... ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பித்த குடும்பத்தினர்!

ஜன்னல் வழியாக தீ வைக்கப்பட்ட சிறை அதிகாரி வீடு... ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பித்த குடும்பத்தினர்!

webteam

கடலூர் மத்திய சிறைச்சாலை உதவி சிறை துறை அதிகாரி வீடு பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

கடலூர் மத்திய சிறைச்சாலையில் உதவி சிறை அதிகாரியாக பணியாற்றும் மணிகண்டன் என்பவர் மத்திய சிறைச்சாலை அருகே உள்ள குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர் நேற்று வெளியூர் சென்றிருந்த நிலையில் அவரது குடும்பத்தினர் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர். இந்நிலையில் நள்ளிரவு வீட்டின் ஜன்னல் கதவை திறந்து அதன் வழியாக பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர்.

இதில் சமையலறை முழுவதும் தீப்பற்றி எரிந்து சேதமானது. அவரது குடும்பத்தினர் வேறு ஒரு அறையில் படுத்து தூங்கி இருந்த நிலையில் புகை வந்ததும் அவர்கள் வெளியேறி உள்ளனர். இதுப்பற்றி காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனை அடுத்து கடலூர் டிஎஸ்பி கரிகால பாரிசங்கர், முதுநகர் காவல்துறை ஆய்வாளர் உதயகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். கைரேகை நிபுணர் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு மத்திய சிறைச்சாலை உதவி அதிகாரி வீட்டில் யார் தீ வைத்தது, என்ன காரணத்துக்காக வைத்தனர் என விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

சிறையில் இருக்கும் கைதிகள் யாரேனும் இதனை திட்டமிட்டு செய்திருக்கலாமா என்ற கோணத்திலும் விசாரணை என்பது தொடங்கியுள்ளது. அதே சமயத்தில் பெட்ரோல் பாட்டில்கள் அங்கிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் பெட்ரோல் எந்த பங்கியில் இருந்து வாங்கி வரப்பட்டது என அருகில் உள்ள பெட்ரோல் பங்குகளில் விசாரணை என்பது தொடங்கியுள்ளது.