கேரளாவில் மனைவிமீது பாம்பை கடிக்கச்செய்து கொலைசெய்த வழக்கில் கணவன் சூரஜ்க்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த உத்ரா என்பவருக்கும், பத்தினம்திட்டாவைச் சேர்ந்த வங்கி அதிகாரியான சூரஜ் என்பவருக்கும் கடந்த 2018ஆம் ஆண்டு திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது. அரூர் பகுதியில் இரண்டாவது மாடியிலுள்ள ஒரு வீட்டில் வசித்துவந்திருக்கின்றனர். கடந்த ஆண்டு ஒருமுறை உத்ராவை பாம்பு கடித்திருக்கிறது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் காப்பாற்றப்பட்டிருக்கிறார். மீண்டும் இந்த ஆண்டு மே மாதத்தில் உத்ராவை கருநாகபாம்பு கடித்ததில் அவர் உயிரிழந்தார். ஜன்னல், கதவுகள் அடைக்கப்பட்டிருந்த அறையில் பாம்பு உள்ளே நுழைந்து கடித்த சம்பவத்தில் போலீசார் மற்றும் உறவினருக்கு சந்தேகம் எழவே, போலீசார் உத்ராவின் கணவர் சூரஜ்ஜிடம் விசாரணையைத் தொடங்கினர்.
விசாரணையில் மனைவியிடம் அதிக வரதட்சணை கேட்டு கொடுக்காததால் தூக்க மாத்திரை கொடுத்து தூங்கவைத்து பாம்பாட்டியிடமிருந்து பாம்பை வாங்கி ஏவிவிட்டு கொலை செய்தது உறுதிபடுத்தப்பட்டது. இதனையடுத்து இரண்டு நாட்களுக்கு முன்பு கொல்லம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இவர்மீது 100 பக்க குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர். மேலும் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட சூரஜ்ஜுக்கு இன்று தண்டனை அறிவிக்கப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் சூரஜ்ஜுக்கு ஆயுள்தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.