குற்றம்

தேவர் ஜெயந்தி நாளில் மகளிர் கல்லூரியில் ரகளை செய்த 7 இளைஞர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி

தேவர் ஜெயந்தி நாளில் மகளிர் கல்லூரியில் ரகளை செய்த 7 இளைஞர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி

webteam

தேவர் ஜெயந்தி விழா தருணத்தில் பெண்கள் கல்லூரியில் ரகளை செய்த புகாரில் ஏழு இளைஞர்களின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேவர் ஜெயந்தி நாளில் மதுரையிலுள்ள மகளிர் கல்லூரிக்குள் இருசக்கர வானத்தில் அத்துமீறி நுழைந்த கும்பல் கல்லூரி வாட்ச்மேனை எட்டி உதைத்து தாக்கியதோடு, மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டனர். சாலையில் நடந்து சென்ற பொதுமக்களிடமும் தகாதவாறு நடந்து கொண்டதுடன், போக்குவரத்திற்கும் பெரும் இடையூறு ஏற்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து தல்லாகுளம் காவல்துறை வழக்குப் பதிந்து சூர்யா, முத்துநவேஷ், அருண்பாண்டியன், மணிகண்டன், சேதுபாண்டியன், மணிகண்டன், முத்துவிக்னேஷ், வில்லியம் பிரான்சிஸ், விமல்ஜாய் பேட்ரிக், அருண் மற்றும் மைனர் சிறுவன் ஒருவரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் தங்களுக்கு ஜாமீன் கோரி சூர்யா, முத்துநவேஷ், அருண்பாண்டியன், மணிகண்டன், சேதுபாண்டியன், முத்துவிக்னேஷ், விமல்ஜாய் பேட்ரிக் ஆகியோர் மதுரை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி வடமலை தலைமையில் விசாரனைக்கு வந்தது. 

அப்போது அரசு தரப்பில், மது போதையில் வந்தவர்கள் வாட்ச்மேனை தாக்கி, டூவீலரை ஏற்றி கொலை செய்ய முயன்றுள்ளனர். கல்லூரி மாணவிகளிடம் தகாத வார்த்தைகளில் பேசியுள்ளனர். ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைப்பர், சிலர் மீது ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ளன,பொது போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தியுள்ளனர்,

இவர்களுக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்கும் அபாயம் உள்ளது என வாதிடப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி 7 பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.