குற்றம்

போலீஸ் இன்ஸ்பெக்டர் சீருடையில் சுற்றித் திரிந்த காங்கிரஸ் நிர்வாகி – காரணம் என்ன?

போலீஸ் இன்ஸ்பெக்டர் சீருடையில் சுற்றித் திரிந்த காங்கிரஸ் நிர்வாகி – காரணம் என்ன?

webteam

திண்டுக்கல்லில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சீருடையில் காங்கிரஸ் நிர்வாகி சுற்றித்திரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திண்டுக்கல் பஸ் நிலையம் பகுதியில் ஒருவர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீருடை அணிந்து மிடுக்கான தோற்றத்தில் மோட்டார் சைக்கிளில் (புல்லட்) சுற்றி வந்தார். அதனை பார்த்த பொதுமக்கள் பலரும் அவர், திண்டுக்கல்லுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டரோ?, என்று நினைத்து அவரை அச்சத்துடன் பார்த்து கடந்து சென்றனர்.

இதற்கிடையே போலீஸ் சீருடையில் மோட்டார் சைக்கிளில் ஒருவர் சுற்றித்திரிகிறார். அவருடைய சீருடை போலி போலீசாரின் சீருடை போல் உள்ளது என வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பஸ் நிலையம் பகுதிக்கு விரைந்து வந்த போலீசார், இன்ஸ்பெக்டர் சீருடையில் சுற்றித்திரிந்தவரை நிறுத்தி விசாரித்தனர்.

அப்போது அவர், காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவர் துரை மணிகண்டன் என்பது தெரியவந்தது. இதனால் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்த போலீசார், எதற்காக போலீஸ் சீருடையில் மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரிகிறீர்கள் என்று விசாரித்தனர். அதற்கு அவர், போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிப்பது தொடர்பான விழிப்புணர்வு குறும்படத்தில் போலீஸ் சீருடையில் தான் நடிப்பதாக தெரிவித்தார்.

இதையடுத்து குறும்படம் எடுப்பதற்கான அனுமதி உள்ளதா? என்று போலீசார் கேட்டனர். அதற்கு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அதற்காக விண்ணப்பித்து ஒப்புதல் பெற்றுவிட்டோம். அதற்கான கட்டணம் மட்டும் செலுத்த வேண்டும் என்று துரை மணிகண்டன் கூறியுள்ளார்.

இதையடுத்து அனுமதியின்றி போலீஸ் சீருடையில் சுற்றித்திரிந்ததாகக் கூறி, போலீசார் அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். இதையடுத்து அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியது.