குற்றம்

நடந்து சென்ற பெண் பிணமாக திரும்பினார்: தனியார் மருத்துவமனை மீது புகார்..!

நடந்து சென்ற பெண் பிணமாக திரும்பினார்: தனியார் மருத்துவமனை மீது புகார்..!

Rasus

சிறுநீரக பிரச்சனை காரணமாக தனியார் மருத்துவமனைக்கு நடந்து சென்ற பெண்ணை தவறான சிகிச்சை அளித்து கொன்று விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை அடுத்த பெரிய நீலாங்கரை புளூ பீச் சாலையில் வசித்து வருபவர் ராஜா(40). இவர் சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு தொழிலாளராக பணிபுரிந்து வருகிறார். தனது மனைவி சற்குணம் மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வந்திருக்கிறார் ராஜா. இதனிடையே சற்குணம் கடந்த சில நாட்களாக சிறுநீர் வெளியேறாமல் அவதியுற்றிருக்கிறார். அதனால் கடந்த வாரம் 2-ம் தேதி நீலாங்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக  சற்குணம் அனுமதிக்கப்பட்டார். நான்கு நாட்கள் சிகிச்சை பெற்ற நிலையில் நேற்று மாலை உப்பு அதிகமாக இருப்பதாக கூறி அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதற்காக 10,000 ரூபாய் முன்பணம் செலுத்துமாறும் உறவினர்களிடம் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மருத்துவமனைக்கு நடந்து வந்த பெண்ணை தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றி உப்பை எடுக்க வேண்டும். கழுத்தில் துளையிட ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறிய மருத்துவமனை நிர்வாகம் 20 நிமிடத்தில் அவர் சுயநினைவின்றி இருந்ததாக சற்குணத்தின் உறவினர்களிடம் தெரிவித்திருக்கின்றனர்.  சந்தேகமடைந்த உறவினர்கள் தீவிர சிகிச்சை பிரிவிற்கு சென்று பார்த்தபோது ஒரு செவிலியரும், மருத்துவ உதவியாளரும் சற்குணத்தின் மார்பு பகுதியை போட்டு அழுத்திக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மருத்துவரிடம் இதுகுறித்து கேட்டதற்கு முறையான தகவலை தர மறுத்ததாகவும் தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து தவறான சிகிச்சையால் தான் தனது மனைவி இறந்ததாகக் கூறி ராஜா நீலாங்கரை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அத்தோடு இவ்விகாரத்தில் நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க போவதில்லை என்றும் போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த ஆய்வாளர் ரமேஷிடம் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். அவர் நிச்சயம் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து சற்குணத்தின் உறவினர்கள் உடலை பெற்றனர். உடற்கூறு ஆய்விற்காக இராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு சற்குணத்தின் உடல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனை சந்தேகத்திற்குரிய மரணமாக வழக்குப்பதிவு செய்து நீலாங்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, “உடற்கூறு ஆய்வில் தெரிந்து கொள்ளுங்கள். மேலும் எவ்வித தகவலும் அளிக்க முடியாது. சிகிச்சை அளித்த மருத்துவரின் விவரங்களையும் தர முடியாது” என மறுத்துவிட்டனர்.

தகவல்கள்: சாந்தகுமார், செய்தியாளர்.