பாதிக்கப்பட்ட குறவர் மக்கள்  PT Tesk
குற்றம்

உடலில் மிளகாய் பொடித் தூவி சித்ரவதை - குறவர் இன மக்களை துன்புறுத்திய ஆந்திர போலீஸ்?

குறவர் சமுதாய மக்களை ஆந்திர மாநில போலீசார் சட்ட விரோதமாக அழைத்து சென்று தாக்கியது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

PT WEB

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா ஒட்டப்பட்டி அருகே உள்ளது புளியாண்டப்பட்டி என்ற கிராமம். இந்த பகுதியை சேர்ந்த, குறவர் சமுதாயத்தை சேர்ந்த சிறுவர்கள், பெண்கள் உள்பட 10 பேரை கடந்த 11-ம் தேதி இரவில் விசாரணைக்காக ஆந்திரா போலீசார் அழைத்து சென்றுள்ளனர்.

ஆந்திராவில் ஒரு திருட்டு வழக்கில் அவர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறி ஆந்திர மாநிலம் சித்தூர் போலீசார் அழைத்து சென்றதாகவும், ஆனால் இந்த திருட்டில் அவர்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை எனக் கூறி, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடமும், காவல் கண்காணிப்பாளரிடமும் ஆன்லைன் மூலம் புகார் அளித்தனர். அதே போல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரும், தமிழ் பழங்குடியின குறவன் சங்கம் சார்பிலும் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.

குறவர் மக்களை துன்புறுத்திய ஆந்திர போலீஸ்

இந்த நிலையில் ஆந்திர மாநிலம் சித்தூரில் வைக்கப்பட்டிருந்த அவர்களில் 8 பேரை கம்யூனிஸ்டு கட்சியினரும், குறவன் சங்கத்தினரும் மீட்டனர். அவர்களில் 4 பேர் பெண்கள், 2 பேர் சிறுவர்கள், 2 பேர் ஆண்கள். அவர்கள் அனைவரும் தற்போது கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலம் சித்தூர் போலீசார் அவர்கள் உடலில் மிளகாய் பொடியை தூவியும், கொடூரமாக தாக்கியும் சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கிருஷ்ணகிரி துணை காவல் கண்காணிப்பாளர் தமிழரசி மற்றும் அதிகாரிகள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அங்கு ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்திட கூடாது என்பதற்காக 30-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

குறவர் சமுதாய மக்களை ஆந்திர மாநில போலீசார் சட்ட விரோதமாக அழைத்து சென்று தாக்கியது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Thirumavalavan

இந்நிலையில், பாதிக்கப்பட்ட எளிய மக்களுக்கு நீதி கிடைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த சூன் 11 அன்று கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகேயுள்ள புலியாண்டப்பட்டியில் வசிக்கும் குறவர்குடியைச் சார்ந்த அய்யப்பன் என்பவரை ஆந்திர மாநிலம், சித்தூர் காவல்நிலையத்திலிருந்து வந்த காவல்துறையினர் திருட்டு வழக்கில் கைது செய்துள்ளனர். அதனைத் தட்டிக் கேட்ட அவரது குடும்பத்தினர் அனைவரையும் கைது செய்து சித்தூருக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

அது தொடர்பாக அவர்களின் உறவினர்கள் தமிழ்நாடு காவல்துறைக்கு இணையம் வழியாகப் புகார் செய்துள்ளனர். அதனால், ஆத்திரமடைந்த சித்தூர் காவல் நிலையத்தினர் மீண்டும் தமிழ்நாட்டு எல்லைக்குள் நுழைந்து மேலும் மூவரைக் கைது செய்துள்ளனர். மொத்தம் ஒன்பது பேரைக் கைது செய்து சித்தூர் காவல்நிலையத்திலேயே வைத்து விசாரணை என்னும் பெயரில் குரூரமான வகையில் அரச வன்கொடுமையைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். குறிப்பாக, பெண்களைத் துன்புறுத்தி வல்லுறவு வன்கொடுமைக்கு முயன்றுள்ளனர் என்றும்; அவர்தம் உயிர்நிலையில் மிளகாய்ப் பொடியைக் கொட்டி இழிநிலையில் வதைத்துள்ளனர் என்றும் புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டதன் பின்னர், அவர்களில் இருவரைத் தவிர மற்றவர்களை விடுவித்துள்ளனர். அந்த இருவரும் இப்போது சிறைப்படுத்தப்பட்டார்களா அல்லது அவர்கள் உயிருடன் உள்ளனரா இல்லையா என்பதே இதுவரை தெரியவில்லை.

Thirumavalavan

எனவே, அவ்விருவரின் நிலையைக் கண்டறியவும், உயிருடனிருந்தால் அவர்களை மீட்கவும் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறோம். பெண்கள் மற்றும் சிறுவர் உள்ளிட்டோர் மீது பொய்வழக்குகள் புனையப்பட்டிருந்தால் அவற்றை விலக்கிட ஆவண செய்ய வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசை வலியுத்துகிறோம். அத்துடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைத்திட தமிழ்நாடு அரசு ஆவண செய்ய வேண்டுகிறோம்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.