குற்றம்

பட்டியலின மக்கள் ஊருக்குள் வருவதை தடுக்க `தீண்டாமை வேலி’? - திருவள்ளூரில் பரபரப்பு புகார்

பட்டியலின மக்கள் ஊருக்குள் வருவதை தடுக்க `தீண்டாமை வேலி’? - திருவள்ளூரில் பரபரப்பு புகார்

நிவேதா ஜெகராஜா

ஆரம்பாக்கம் அருகே பட்டியலின மக்களை ஊருக்குள் வருவதை தடுக்க, தீண்டாமை வேலி அமைக்க முயற்சித்ததாக எழுந்த புகாரையடுத்து கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர்கள் அந்த கிராமத்தில் நேரில் ஆய்வு செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் அருகே தமிழக - ஆந்திர எல்லையில் தமிழக பகுதியான தோக்கமூர் கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பட்டியலின குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். கூலி வேலையை மட்டுமே நம்பி வாழ்ந்து வரும் இந்த கிராமத்தில், திரௌபதி அம்மன் ஆலயத்தின் எதிரே உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை கோயில் நிலம் எனக்கூறி மாற்று சமூகத்தினர் வேலி அமைப்பதற்காக சிமெண்ட் கம்பங்களை நட்டுள்ளனர். பொதுப்பாதையை மறித்து வேலி அமைக்கப்பட்டால், கூலி வேலைக்கு செல்லும் பெரியவர்கள் முதல் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் வரை பட்டியலின சமூகத்தை சேர்ந்த மக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் அவர்கள் அளித்த புகாரின் பேரில், ‘மாற்று சமூகத்தினர் மேற்கொண்டு வேலி அமைக்கும் பணிகளை தொடரக்கூடாது’ என வருவாய்த்துறையினர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும், அந்நடவடிக்கையை மாற்று சமூகத்தினர் தொடர்ந்ததாகவும், குடியிருப்புகளுக்காக தங்களிடம் பணம் வசூலிக்கப்படும்போதும்கூட ஊருக்குள் சென்று செயல்பட கிராம நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் பட்டியலின மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இப்படி தொடர்ச்சியாக ஆரம்பாக்கம் கிராமத்தில் தீண்டாமை கடைபிடிக்கப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, கந்தர்வகோட்டை சின்னத்துரை ஆகியோர் தோக்கமூர் கிராமத்தில் நேரில் ஆய்வு நடத்தினர். அப்போது அப்பகுதி பட்டியலின மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் சட்டமன்ற குழு தலைவர் நாகை மாலி, “தோக்கமூர் கிராமத்தில் புறம்போக்கு நிலத்தில் எழுப்பப்பட்ட சுவரையும், வேலி அமைப்பதற்காக நிறுவப்பட்ட கம்பங்களை மாற்று சமூகத்தினர் அகற்ற வேண்டும். பட்டியலின மக்களுக்கு வீடு கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட இடத்திற்கு பணத்தை பெற்று கொண்டு, இடம் வழங்க மறுக்கும் தனிநபர் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தமிழக அரசை கேட்டுக்கொண்டார்.