நாமக்கல் மாவட்டம் வெப்படையில் உள்ள தனியார் நூற்பாலையில் வடமாநில பெண் தொழிலாளியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மூன்று வடமாநில இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் நாமக்கல் மாவட்டம் வெப்படை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நூற்பாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பால்ராஜ் (24) என்ற தொழிலாளியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், நூற்பாலைக்கு அருகில் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்த பால்ராஜ், அந்த பெண்ணை தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து பால்ராஜ் மற்றம் அவரது நண்பர்களான பிரதீப் குமார், மனோஜ் குமார் ஆகிய மூவரும் சேர்ந்து அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதில், மயங்கிய அந்த பெண்ணை கண்டு அச்சமடைந்த மூவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதனையடுத்து மயக்கம் தெளிந்த பெண், நூற்பாலை மேலாளரிடம் உதவியுடன் வெப்படை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் 3 பேரும் கூட்டு பாலியல் கொடுமை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பால்ராஜ், பிரதீப்குமார் மற்றும் மனோஜ் குமார் ஆகிய மூன்று இளைஞர்களையும் கைது செய்துள்ளனர். மேலும் வடமாநில பெண்ணிடம் திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் ஹேமாவதி தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.