குற்றம்

நிலம், வீடு கட்டித்தருவதாகக் கூறி மோசடி செய்த நிறுவன உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

நிலம், வீடு கட்டித்தருவதாகக் கூறி மோசடி செய்த நிறுவன உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

Sinekadhara

நிலம், வீடு கட்டித்தருவதாகக் கூறி மோசடி செய்த நிறுவன உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூபாய் 94 லட்சத்து 90 ஆயிரம் அபராதம் விதித்து கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கோவை சுங்கம் பகுதியில் செயல்பட்டு வந்த Kovai land bankers என்ற நிறுவனம், தங்களது நிறுவனத்தில் 3இல் ஒரு பங்கு செலுத்தினால் நிலமும், வீடும் கட்டித்தருவதாகக் கூறி விளம்பரப்படுத்தினார். இதனை நம்பி, பலர் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். ஆனால், அறிவித்தபடி நிறுவனம் சார்பில் எந்தவித நிலமும், வீடும் கட்டித்தரப்படாததால், தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முதலீட்டாளர்கள் கோவை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். அதில், 2016ஆம் ஆண்டு கோவையை அருணாச்சலம் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், 73 முதலீட்டாளர்களிடம் ரூபாய் 95 லட்சத்து 55 ஆயிரம் மோசடி செய்தது தெரியவந்தது.

இந்த வழக்கு விசாரணை கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் (டான்பிட்) நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்து வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், நிறுவன உரிமையாளர் முத்துகுமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 94 லட்சத்து 90 ஆயிரம் அபராதமும் விதித்து கோவை தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.