செய்தியாளர்: ஐஸ்வர்யா
கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு கலைக் கல்லூரி உள்ளது. இங்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதில், வெளியூர் மாணவிகளும் வால்பாறை அரசு மகளிர் தங்கும் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் ரீதியான தொந்தரவு அளிக்கப்படுவதாக மாநில பெண்கள் ஆணையத்திற்கு பெயரிடப்படாத கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த கடிதம் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்பட்ட நிலையில், மாவட்ட சமூக நலத்துறை அலுவலருக்கு மாவட்ட ஆட்சியர் விசாரணை செய்ய உத்தரவிட்டார். அதன் அடிப்படையில, கல்லூரிக்கு நேரடியாகச் சென்ற மாவட்ட சமூக நலத்துறை அலுவலர்கள், மாணவிகளுக்கு நடந்த பாலியல் தொந்தரவை உறுதி செய்தனர். இதையடுத்து சம்மந்தப்பட்ட காவல்துறைக்கு புகார் அளித்தனர்.
புகரின் பேரில், வால்பாறை டி.எஸ்.பி விசாரணை நடத்தினார். விசாரணையில், மாணவிகளை பேராசிரியர்கள் மற்றும் கல்லூரியில் பணிபுரியும் அலுவலர்கள் தொட்டுப் பேசுதல், ஆபாசமாக பேசுதல், அலைபேசிக்கு தவறான மெசேஜ் அனுப்புதல் போன்ற செயலில் ஈடுபடுகின்றனர். இவர்களால் தொந்தரவு ஏற்படுகிறது. எங்களால் படிக்க இயலவில்லை. நாங்கள் வெளியூருக்கே செல்ல இருப்பதாகவும் மாணவிகள் தெரிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தற்காலிக பேராசிரியர்கள் முரளி, சதீஷ்குமார், ஆய்வக உதவியாளர் அன்பரசன், மக்களுடன் முதல்வர் தன்னார்வலர் ராஜா பாண்டியன் ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனர்.