குற்றம்

பெண் அதிகாரி பாலியல் வன்கொடுமை வழக்கு: விமானப்படை விசாரணைக்கு மாற்றப்பட்டதை எதிர்த்து மனு

பெண் அதிகாரி பாலியல் வன்கொடுமை வழக்கு: விமானப்படை விசாரணைக்கு மாற்றப்பட்டதை எதிர்த்து மனு

நிவேதா ஜெகராஜா

கோவையில் விமானப்படை பெண் அதிகாரி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்கு, விமானப்படை விசாரணைக்கு மாற்றப்பட்டதை எதிர்த்து மாநகர காவல்துறையினர் மனுதாக்கல் செய்துள்ளனர்.

கோவை பந்தய சாலையில் உள்ள விமானப்படை பயிற்சி மையத்தில் கடந்த 10ஆம் தேதி சக அதிகாரியான அமிதேஷ் என்பவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் அதிகாரி ஒருவர் விமானப்படை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். இதில் நடவடிக்கை எடுக்க தாமதமானதாக கூறப்படும் நிலையில், பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி கோவை காவல் துறையிடம் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த காந்திபுரம் அனைத்து மகளிர் போலீசார், விமானப்படை அதிகாரி அமிதேஷை கைது செய்தனர்.

கோவை மாநகர காவல்துறை நடத்தி வந்த இந்த விசாரணையை, விமானப்படை விசாரணைக்கு மாற்றி கூடுதல் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் குற்றம்சாட்டப்பட்டுள்ள அமிதேஷை, 4 நாட்கள் நீதிமன்ற காவல் முடிந்த பிறகு இந்திய விமானப்படை அதிகாரிகள் அழைத்து சென்றனர். இந்நிலையில், வழக்கு விமானப்படை விசாரணைக்கு மாற்றப்பட்டதை எதிர்த்தும், அதிகாரியை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கவும் அனுமதி கோரி, கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மாநகர காவல்துறை சார்பில் தற்போது மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.