தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் சித்ரா (35). இவர், கோவை வேலாண்டிபாளையம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் உதவியாளராக வேலை செய்து வந்தார். அப்போது அதே பகுதியில் டெய்லர் கடை நடத்தி வரும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மதுரைவீரன் (39), என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இருவரும் கடந்த 4 மாதங்களாக, கோவை சின்னத்தடாகம் மாரியம்மன் கோவில் வீதியில் வீடு எடுத்து தங்கி ஒன்றாக வசித்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக வீடு பூட்டியிருந்த நிலையில், மதுரைவீரன் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை நீதிமன்றத்தில் சித்ராவை கொலை செய்துவிட்டதாக சரணடைந்துள்ளார். இதையடுத்து திண்டுக்கல் போலீஸார் கோவை போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.
தகவல் அறிந்த தடாகம் போலீஸார், சம்பவம் நடந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது சித்ரா சடலமாக கிடந்ததுள்ளார். இதையடுத்து சித்ராவின் உடலை மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத் தொடர்ந்து மதுரை வீரனிடம் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், "சித்ரா கடந்த 4 மாதங்களாக தன்னுடன் வசித்து வந்தார். அவருக்கு வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு, அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். கடந்த 29 ஆம் தேதி இருவரும் குடிபோதையில் வீட்டில் இருந்தபோது வாக்குவாதத்தில் ஈடுபட்டோம். அப்போது ஆத்திரமடைந்த நான், சித்ராவை கத்திரிகோலால் குத்தி கொலை செய்தேன்” என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். இதையடுத்து சரணடைந்த மதுரைவீரன் 15 நாட்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.