Accused pt desk
குற்றம்

கோவை: கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதைப் பொருள் விற்பனை – கடத்தல் கும்பல் சிக்கியது எப்படி?

கோவையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து உயர் ரக போதைபொருள் விற்பனை செய்த கென்யா பெண், பெங்களூருவில் கைது செய்யப்பட்டார்.

webteam

செய்தியாளர்: ஐஷ்வர்யா

கோவையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதைப்பொருள் விற்பனை செய்யும் கும்பலை பிடிக்க, மாநகர காவல் ஆணையர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையின் முடிவில், கடந்த மே 17 ஆம் தேதி 6 பேர் கொண்ட போதைப்பொருள் விற்பனை தொடர்பான கும்பல் கைது செய்யப்பட்டனர். கவுதம், அபிமன்யு, பாசில், முகமது அர்சித், இஜாஸ், பெவின் ஆகிய அந்த 6 பேரிடம் இருந்து 102 கிராம் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டன.

City police

இந்நிலையில், கைதானவர்களுக்கு திண்டுக்கல்லை சேர்ந்த பிரவீன்குமாரும், கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த வினோத்தும்தான் போதைப்பொருள் விநியோகம் செய்கின்றனர் என்பது காவல்துறைக்கு தெரியவந்தது. இவர்கள் இருவரும் கர்நாடக மாநிலம் பெங்களூரு, தார்வார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து போதைப்பொருளை கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து பிரவீன்குமார், வினோத் ஆகியோரை கைது செய்து காவல்துறை விசாரணை நடத்தியபோது, போதைப் பொருள் கடத்தலுக்கு முக்கியமாக செயல்பட்டது கென்யா நாட்டை சேர்ந்த இவி பொனுகே (26) என்ற பெண் என்பது தெரியவந்தது.

இவர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவரது கூட்டாளியான உகாண்டா நாட்டை சேர்ந்த காவோன்கே என்பவரை சந்திக்க சென்றபோது கோவை தனிப்படை காவல்துறையினர் மடக்கிப்பிடித்து கைது செய்து கோவை அழைத்து வந்தனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட தொடர் விசாரணையில் அவருக்கு மேலும் பல சர்வதேச போதைப்பொருள் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கைதான கென்யா பெண் இவி பொனுகே, தார்வார் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் சட்டக் கல்வி படிப்பதற்காக தங்கி இருந்ததும், பின் படிப்பை முடிக்காமலும், விசா காலாவதியான நிலையில், தொடர்ந்து தார்வார், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் தங்கி இருந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.

Central Jail

இவர் பலரையும் ஆன்லைன் மூலம் தொடர்பு கொண்டு போதைப் பொருளை சப்ளை செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. தனிப்படையினர் நடத்திய சோதனையில் தெரியவந்த பிற விஷயங்கள் -

உகாண்டா நாட்டை சேர்ந்த இவி பொனுகேவின் கூட்டாளி காவோன்கே, சிறையில் இருந்து கொண்டே போன் மூலம் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்துள்ளார். அத்தகவல்களை இவி பொனுகேவுக்கு அவர் சொல்லவே, அதன் அடிப்படையில் அந்தந்த இடங்களுக்கு இவி பொனுகே சென்றுள்ளார். இதில் எங்குமே நேரடியாக போதைப்பொருளை விற்பனை செய்யவில்லை இவி பொனுகே. மாறாக, ஆன்லைன் மூலம் பணத்தை பெற்றுக்கொண்டு, போதைப் பொருள் வைக்கப்பட்டிருக்கும் இடத்தின் லொகேஷனை மட்டும் அனுப்பி வைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதில் கிடைக்கும் பணத்தை, கென்யா பெண் இவி பொனுகே, உகாண்டா நாட்டை சேர்ந்த மற்றொரு நண்பரான டேவிட் என்பவருக்கு அனுப்பி வந்துள்ளார். அந்த டேவி, டெல்லியில் தொடங்கி இருந்த வங்கி கணக்கிற்கு அனுப்பி அதன் மூலம் பணம் சம்பாதித்து வந்துள்ளார்.

கோவை மாநகர காவல்

இந்த கணக்கில் ரூ.49 லட்சம் இருந்துள்ளதை கண்டறிந்த தனிப்படையினர், அதனை முடக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காவோன்கே என்பவரை கர்நாடக காவல்துறை மூலம் கைது செய்யவும் கோவை தனிப்படை காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கிடையே தற்போதைக்கு கைதான கென்யா பெண் உள்பட 3 பேரும் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.