money scam in coimbatore (Arrested) pt desk
குற்றம்

கோவை: ‘ரூ 2000 நோட்டை 500-ஆக மாற்றி கொடுத்தால் 15% கமிஷன்’ நூதன மோசடியில் ஈடுபட்டோர் அதிரடி கைது!

கோவையில், 2000 ரூபாய் நோட்டுகளை 500 ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொடுத்தால் 15 சதவீதம் கமிஷன் கொடுப்பதாகக் கூறி சுமார் 1.30 கோடி ரூபாயை கொள்ளையடித்துச் சென்ற கும்பலை போலீசார் கைது செய்தனர்

webteam

கோவை மாவட்டம், தெலுங்குபாளையத்தில் பிரகாஷ் (44) என்பவர் நகைகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு கோவையில் உள்ள தனியார் வங்கியின் மேலாளர் மூலமாக பொள்ளாச்சியைச் சேர்ந்த சின்னக்குட்டி என்பவர் அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில், பிரகாஷை தொடர்பு கொண்ட சின்னக்குட்டி தனக்குத் தெரிந்தவர்களிடம் 2000 ரூபாய் நோட்டுகள் அதிகம் இருப்பதாகவும் அதை 500 ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொடுத்தால் 15 சதவீதம் கமிஷன் கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில், கடந்த 10.06.2023 ஆம் தேதி சின்னக்குட்டி மற்றும் பிரகாஷை ஆகியோர் பொள்ளாச்சியை அடுத்த அம்பராம்பாளையம் பகுதிக்கு, 500 ருபாய் நோட்டுகளுடன் சென்றுள்ளனர். அப்போது பிரகாஷின் கவனத்தை திசை திருப்பி காரில் வைத்திருந்த ரூ.1 கோடியே 27 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை (500 ரூ. தாள்களென சொல்லப்படுகிறது) எடுத்துக் கொண்டு தப்பிக்க முயன்றுள்ளனர் சின்னக்குட்டி மற்றும் அவரது கூட்டாளிகள். அப்போது, பிரகாஷ் சத்தம் போட்டுள்ளார். இருப்பினும் அவரை மிரட்டிவிட்டு பணத்துடன் அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

accused

இது தொடர்பாக ஆனைமலை காவல் நிலையத்தில் பிரகாஷ் அளித்த புகார் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோரின் உத்தரவின் பேரில், 6 தனிப்படைகள் அமைத்து விசாரனை மேற்கொண்டனர். இதில், மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட சின்னக்குட்டி (42), மீனாட்சி (38), பாண்டியன் (52), அழகர்சாமி (45), சௌமியான்( 29), கவாஸ்கர் (26) ஆகியோரை தனிப்படையினர் கைது செய்தனர்.

இதையடுத்து அவர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 27 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்து அவர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை 12 மணி நேரத்திற்குள் கைது செய்து பணத்தை மீட்ட தனிப்படையினரை பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு வெகுமதி வழங்கினார்.

accused

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் கூறும்போது..

”இந்த மோசடி கும்பல் முதல் முறையாக இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட பணம் தொடர்பாக வருமானவரித் துறையினருக்கும் தகவல் அளித்துள்ளோம். ஆவணங்களை சரிபார்த்த பின்னரே பணம் ஒப்படைக்கப்படும். 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிகளை மட்டுமே அணுக வேண்டும். மோசடி கும்பலின் பின்னணி குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். வீடியோ ஒன்றில் தங்களிடம் ரூ.2,000 நோட்டுகள் இருப்பதாகக் காட்டி பாதிக்கப்பட்டவரை மாற்று பணத்துடன் நேரில் வரவழைத்துள்ளனர். இந்த வழக்கில் யார் யாருக்கெல்லாம் தொடர்புள்ளது என தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என்றார்.