குற்றம்

குழந்தைகளை வேலைக்கு அமர்த்திய நிறுவனங்கள்... ரூ.5,50,000 அபராதம் விதித்த நீதிமன்றம்

குழந்தைகளை வேலைக்கு அமர்த்திய நிறுவனங்கள்... ரூ.5,50,000 அபராதம் விதித்த நீதிமன்றம்

webteam

கோவையில் கடந்த ஜூலை மாதத்தில் குழந்தை தொழிலாளர்களை நியமிப்பதை தடுக்கும் விதத்தில் நடத்திய ஆய்வில் குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 9 நிறுவனங்களுக்கு ரூ.5,50,000/- அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது கோவை குற்றவியல் நீதிமன்றம்.

கோயம்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவின் பேரில் கடந்த ஜூலை மாதத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கடைகள் மற்றும் உணவு நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர் முறை ஒழித்தல் மற்றும் முறைப்படுத்துதல் சட்டத்தின் கீழ் மொத்தம் 350 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அப்போது சுக்குவார்பேட்டை பகுதியில் உள்ள நகைப்பட்டறைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் 2 நிறுவனங்களில் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த 6 வளரிளம் பருவத்தினர் மற்றும் 2 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். தொடர்ந்து மீட்கப்பட்ட வளரிளம் பருவத்தினர் மற்றும் குழந்தைத் தொழிலாளர்கள் குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மேலும் ஆய்வின் போது நிறுவன உரிமையாளர்களிடம் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு முறை குறித்து ஸ்டிக்கர் ஒட்டுதல் மற்றும் துண்டு பிரசுரங்கள் விநியோகித்தல் போன்ற விழிப்புணர்வு நெறிமுறைகள் அறிவுறுத்தப்பட்டன. 14 வயதிற்குட்பட்ட குழந்தைத் தொழிலாளர் மற்றும் 18 வயதிற்குட்பட்ட வளரிளம் பருவத்தினரை பணியில் அமர்த்திய நிறுவனங்களின் மீது கோயம்புத்தூர் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை எடுத்து விசாரித்த கோயம்புத்தூர் குற்றவியல் நீதிமன்றம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 நிறுவனங்களிற்கு ரூ.5,50,000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியது. மேலும், 1986ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர் மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் தடுப்பு சட்டத்தின் கீழ் குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தினால் குறைந்தபட்சம் ரூ. 20,000/-லிருந்து அதிகபட்சமாக ரூ. 50,000/-வரை அபராதம் மற்றும் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.