சென்னை வியாசர்பாடி மல்லிப்பூ காலனி பகுதியைச் சேர்ந்தவர் சத்தியதாஸ். ஆட்டோ ஓட்டுனரான இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு சியாமளா (27) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 6 வயது மற்றும் 2 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் சியாமளா மூன்றாவது முறையாக கர்ப்பமாகியுள்ளார். அப்போது சத்தியதாஸின் நண்பரான கணேஷ் மற்றும் அவரது மனைவி சரண்யா இருவரும் உங்களுக்கு பிறக்கும் மூன்றாவது குழந்தையை தங்களிடம் கொடுத்து விடும் படியும் அதற்காக இரண்டரை லட்சம் பணம் தருகிறோம் இதனால் உங்கள் கஷ்டங்கள் நீங்கும் என தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து சத்திய தாஸ், தனது மனைவி சியாமளா உடன் கலந்தாலோசித்து 8 மாத கர்ப்பிணியாக இருக்கும் போதே பிறக்கும் குழந்தையை விற்க ஒப்புக்கொண்டு சிறுக சிறுக 25 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து கடந்த 6ஆம் தேதி சியாமளாவுக்கு தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இதையடுத்து 10 ஆம் தேதி அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார். பின்னர் சியாமளா பிறந்த ஆண் குழந்தையை தனது தாய் நாக வல்லியிடம் காண்பித்து விட்டு ஏற்கனவே கூறியது போல் கணேஷ்-சரண்யா தம்பதியிடம் இரண்டு லட்ச ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டு பிறந்து 8 நாட்களே ஆன ஆண் குழந்தையை அவர்களிடம் விற்றுள்ளனர்.
இதையடுத்து வியாசர்பாடியில் இருந்து வீட்டை காலி செய்துவிட்டு எண்ணூர் சுனாமி குடியிருப்பில் சத்திய தாஸ் - சியாமளா தம்பதி குடியேறினர். எண்ணூருக்கு சென்ற நிலையில், சியாமளாவுக்கு தனது ஆண் குழந்தை ஞாபகம் வந்து மன வேதனைக்கு உள்ளானதாகக் கூறப்படுகிறது. உடனே சியாமளா தன் தாயிடம் சென்று ஆண் குழந்தையை பிரிந்து என்னால் இருக்க முடியவில்லை எனக்கூறி கதறி அழுதுள்ளார்.
இதனை பார்த்து வேதனையடைந்தா சியாமளாவின் தாய் நாகவல்லி தனது மகளை அழைத்து வந்து வியாசர்பாடி காவல் நிலையத்தில் குழந்தையை மீட்டுத் தருமாறு புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை நடத்தியதில் குழந்தையை விற்ற பணம் 2 லட்சம் ரூபாயில் ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்து விட்டு மீதி ஒரு லட்சம் ரூபாயை வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து சத்திய தாஸை கைது செய்த வியாசர்பாடி போலீசார், நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர். இதைத் தொடர்ந்து குழந்தையை வாங்கிச் சென்ற கணேஷ் சரண்யா தம்பதியினர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தியதில் மூலக்கொத்தளம் சிதம்பரனார் தெரு பகுதியைச் சேர்ந்த பவானி (34) என்பவர் மூலமாக குழந்தை விற்பனை நடந்துள்ளது தெரியவந்தது.
வேலூரை சேர்ந்த குமுதா என்பவருக்கு குழந்தை வேண்டும் என்பதால் தனக்கு நன்கு தெரிந்த கணேஷ் - சரண்யாவிடம் குழந்தை ஒன்று வேண்டும் எனவும் அதற்கு கமிஷன் பணம் தருவார்கள் எனவும் கூறி வைத்துள்ளார். இதையடுத்து குழந்தைக்கு ரூ.2.5 லட்சம் பேசி முடித்துள்ளனர் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், வேலூரைச் சேர்ந்த குமுதா ரூ.4.20 லட்சம் பணத்தை குழந்தைக்காக பவானியிடம் கொடுத்ததும், அதில் ரூ.10 ஆயிரம் பணத்தை பவானி எடுத்துக் கொண்டு மீதி பணத்தை கணேஷ் மற்றும் சரண்யாவிடம் கொடுத்ததும் தெரியவந்தது. அந்த பணத்தில் ரூ.2.10 லட்சம் பணத்தை கணேஷ் மற்றும் சரண்யா எடுத்துக் கொண்டு மீதி 2 லட்சம் ரூபாய் மட்டும் சத்தியதாஸிடம் கொடுத்து குழந்தையை வாங்கியதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் நேற்று எண்ணூர் ராமாராவ் தெருவைச் சேர்ந்த கணேஷ் (39), திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த சரண்யா (36) மூலக்கொத்தளம் பகுதியைச் சேர்ந்த பவானி (34) ஆகிய மூன்று நபர்களையும் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், வியாசர்பாடி போலீசார் வேலூருக்குச் சென்று குமுதா என்பவர் யார்? குழந்தை தற்போது யாரிடம் உள்ளது? என்பது குறித்து விசாரணை நடத்தி குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.