குற்றம்

கத்தி முனையில் குழந்தை - 4 லட்சம் பணம், 8 சவரன் நகைகளை கொள்ளையடித்த மர்ம கும்பல்

கத்தி முனையில் குழந்தை - 4 லட்சம் பணம், 8 சவரன் நகைகளை கொள்ளையடித்த மர்ம கும்பல்

webteam

மதுரையில் கத்தி முனையில் குழந்தையை வைத்து மிரட்டி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் காமாட்சி நகர் பகுதியில் வசித்து வருபவர் தினேஷ் குமார். இவர் மும்பையில் செயல்படும் மருந்து நிறுவனத்தின் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஐஸ்வர்யா. இன்று காலை இவர்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் மாடி வழியாக வீட்டினுள் நுழைந்துள்ளனர். அவர்களை கண்டு அதிர்ச்சியடைந்த தினேஷ், சுதாரிப்பதற்குள் மர்ம நபர்கள் அவரது ஒன்றரை வயது குழந்தையை கத்தி முனைக்கு கொண்டு வந்தனர்.

கத்தி முனையில் குழந்தையை கைப்பற்றிய மர்ம நபர்கள் தினேஷிடம் வீட்டில் உள்ள நகை மற்றும் பணத்தை எடுக்குமாறும் இல்லையேல் குழந்தையை கொன்று விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். ஆனால் அதற்கு தினேஷ் ஒத்துக்கொள்ள வில்லை எனத்தெரிகிறது. இதனால் கோபமடைந்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த தொலைக்காட்சிப்பெட்டியை கத்தியை வைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

 இதனால் அதிர்ச்சியடைந்த தினேஷ் பீரோவிலிருந்த 4 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 8 சவரன் மதிப்பிலான தங்க நகை ஆகியவற்றை எடுத்துக் கொடுத்துள்ளார். நகை மற்றும் பணத்தை எடுத்துக்கொண்ட கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். தகவலறிந்த அலங்காநல்லூர் போலீசார் மோப்ப நாய், மற்றும் கைரேகை நிபுணர்களுடன் சென்று தடயங்களை சேகரித்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளைக் கைப்பற்றி மர்ம நபர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.