Accused pt desk
குற்றம்

சென்னை| குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக இருவர் கைது – 1 டன் குட்கா பறிமுதல்

மடிப்பாக்கத்தில், தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்து, 1 டன் குட்கா புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

PT WEB

செய்தியாளர்: சாந்த குமார்

சென்னை மடிப்பாக்கம் சுற்று வட்டாரப் பகுதியில், தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை மொத்தமாக பதுக்கி வைத்து, கடைகளுக்கு விற்பனை செய்பவர் குறித்து மடிப்பாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, மடிப்பாக்கம், காமராஜர் முதல் குறுக்கு தெருவில் வசித்து வரும் கௌதமி (35), என்பவர் வீட்டை சோதனையிட்டனர்.

இந்த சோதனையின்போது, 19 கிலோ குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து கௌதமியை கைது செய்த போலீசார், காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

1 டன் குட்கா பறிமுதல்

விசாரணையில், கௌதமி அளித்த தகவலின்படி, மடிப்பாக்கம் அடுத்த கோவிலம்பாக்கம், பெரியார் நகரில் உள்ள ஒரு வீட்டை சோதனையிட்ட போலீசார், அங்கே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 995 கிலோ குட்கா புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

குட்காவை பதுக்கி வைத்து, விற்பனை செய்து வந்த கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜேஷ் (25), என்பவரை கைது செய்த போலீசார், விற்பனைக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.

இதைத் தொடர்ந்து 1 டன் குட்கா ;பொருட்களை பறிமுதல் செய்த மடிப்பாக்கம போலீசார், கௌதமி மற்றும் ராஜேஷ் ஆகிய இருவரிடமும் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.