தமிழக முதல்வர் பாதுகாப்பு பிரிவின் டிஐஜியாக பணியாற்றி வருபவர் ஐபிஎஸ் அதிகாரி திருநாவுக்கரசு. இவர், “என் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி சிலர் பண மோசடி செய்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும்” என்று கடந்த பிப்ரவரி மாதம் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் பிரிவில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.
தன் புகாரில் அவர், “CRPF முகாமில் பணிபுரியும் நான் பணிமாறுதலுக்குச் செல்வதால் வீட்டில் உள்ள பர்னிச்சர் பொருட்களை விற்க விரும்புவதாகவும், அந்த பொருட்களை வாங்கிக் கொண்டு பணம் தருமாறும் மர்ம நபர்கள் என் நண்பர்களிடம் மோசடி முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்” எனக் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து சென்னை சைபர் க்ரைம் போலீசார், 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், குற்றவாளிகள் ராஜஸ்தான் மாநிலத்தில் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் ராஜஸ்தான் மாநிலம் சென்று ஹனீப் கான் (31), வஷித் கான் (24) ஆகிய இருவரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது போன்ற சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள், அருகில் உள்ள காவல் நிலையத்தையோ அல்லது சைபர் கிரைம் காவல் நிலையத்தையோ உடனடியாக அணுகவும்.
இதுபோன்று பணத்தை இழந்தவர்கள் சைபர் கிரைம் உதவி எண்: 1930 ஐ தொடர்பு கொள்ளலாம்.
அதேபோல் www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலும் புகார் தெரிவிக்கலாம்