குற்றம்

சென்னை: வீடியோ பதிவுசெய்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட போக்குவரத்து தலைமை காவலர்

சென்னை: வீடியோ பதிவுசெய்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட போக்குவரத்து தலைமை காவலர்

சங்கீதா

சென்னையில் தலைமை காவலர் ஒருவர் வீடியோ பதிவுசெய்துவிட்டு, தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கடந்த நான்கு மாதங்களாக வாடகை வீட்டில், தனியாக வசித்து வந்தவர் தலைமைக் காவலர் கிருஷ்ணகுமார் (41). இவர், திருவல்லிக்கேணி போக்குவரத்து காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார். இவரின் மனைவி விஜயலட்சுமி மற்றும் 2 குழந்தைகள் அம்பத்தூரில் வசித்து வருகிறார்கள்.

இந்நிலையில், கிருஷ்ணகுமாருக்கும், ராஜ மங்கலம் காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் ஒருவருக்கும் திருமணத்துக்கு மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, கடந்த 3-ம் தேதி அன்று,  உடன் பணிரிந்த அந்தப் பெண்ணின் வீட்டிற்கு, குடிபோதையில் சென்று தலைமைக் காவலர் கிருஷ்ணகுமார் தகராறு செய்ததாக தெரிகிறது.

இதையடுத்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தன் பேரில், நொளம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காவலர் கிருஷ்ணகுமாரை நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்து அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் இன்று தன்னுடைய இறப்பிற்கு உதவி ஆய்வாளர் தான் காரணம் என்று வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துவிட்டு, படுக்கை அறையில் உள்ள மின் விசிறியில் கயிற்றால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து காவலரின் வீட்டின் அருகில் வசிப்பவர்கள் கொடுத்த தகவலின் பேரில், கொரட்டூர் காவல்துறையினர் சம்பவ இடம் சென்று கிருஷ்ணகுமாரின் உடலை கைப்பற்றி கே.எம்.சி. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.