குற்றம்

கொளத்தூர் கொள்ளை சம்பவம்: கொள்ளையர்களைப் பிடிக்க காவல்துறை தீவிரம்

கொளத்தூர் கொள்ளை சம்பவம்: கொள்ளையர்களைப் பிடிக்க காவல்துறை தீவிரம்

webteam

கொளத்தூர் நகைக்கடையில் கொள்ளையில் ஈடுபட்ட வடமாநிலத்தவர்கள் ஏற்கனவே குற்ற வழக்கில் சிறை சென்றவர்கள் என்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சென்னை கொளத்தூர் நியூ லட்சுமிபுரம் கடப்பா சாலையில் உள்ள நகைக்கடையில் மேல்தள சுவரை பெயர்த்து 3.5 கிலோ தங்க நகைகள் மற்றும் 4 கிலோ வெள்ளி நகைகள், ரூ.2 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. கண்காணிப்பு கேமரா காட்சியில் கொள்ளையர்கள் தங்க நகைகளுடன் தப்பி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதையடுத்து அண்ணாநகர் காவல்துறை துணை ஆணையர் டாக்டர் சுதாகர் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொள்ளை சம்பவத்தில் 2 பேர் ஈடுபட்டு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

நகைக்கடையின் மேல் தளத்தில் உள்ள கடைக்கு வாடகைக்கு வந்தவர்கள் தான் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியிருப்பது விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து கடை உரிமையாளர் கொடுத்த தகவலின் அடிப்படையில், கொள்ளையில் ஈடுபட்டது ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தை சேர்ந்த நாத்துராம், ஜோத்பூர் மாவட்டத்தை சேர்ந்த தினேஸ் சவுத்ரி என தெரியவந்தது. நாத்துராம் குறித்து ராஜஸ்தான் பாடி மாவட்டம் ஜெய்தாரான் தெஹ்சில் காவல் நிலையத்திற்கு புகைப்படமும் சிசிடிவி காட்சிகளையும் தனிப்படை போலீசார் கொடுத்துள்ளனர்.

சென்னையிலிருந்து சென்றுள்ள தனிப்படை போலீசார் சம்பந்தப்பட்ட காவல் நிலையம் சென்று இவர்கள் குறித்த தகவல்களை சேகரித்துள்ளனர். மேலும் ராஜஸ்தான் மாநில போலீசார் உதவியுடன் சொந்த ஊருக்கு சென்றும் கொள்ளையர்களின் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் தினேஷ் சவுத்ரியையும் பிடிக்க தனிப்படை போலீசார் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 2 பேரின் செல்போன் எண்களையும் சேகரித்துள்ள ராஜமங்கலம் போலீசார் சைபர் க்ரைம் போலீசாரின் உதவியோடு ஆய்வு செய்துள்ளனர். கொள்ளை நடப்பதற்கு முன்பாக இவர்கள் யாரிடமெல்லாம் பேசியிருக்கிறார்கள் என்ற தகவல் சேகரிக்கப்பட்டு, யாருக்கெல்லாம் இதில் தொடர்பு உள்ளது என்ற விவரங்களையும் சேகரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 2014ல், சென்னை மாதவரத்தில் நடந்து சென்ற பெண்ணிடம் நகையை பறித்த வழக்கில் நாத்துராம், தினேஷ் சவுத்ரி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, புழல் சிறையில் யாரெல்லாம் நாத்துராம், தினேஷ் சவுத்ரியை சந்தித்தார்கள், அவர்களுக்கும் கொள்ளையர்களுக்கும் என்ன தொடர்பு என்ற தகவலையும் போலீசார் திரட்டி வருகின்றனர். திருட்டு நடந்த கட்டிடத்தின் உரிமையாளரிடம், கொள்ளையர்களுக்கு வாடகைக்கு கடையை வாங்கித்தர தமிழில் பேசி உதவிய நபரை போலீசார் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.