Accused pt desk
குற்றம்

துரோகம்! பழிக்குப் பழியாக ரவுடி கொலை.. பட்டாக் கத்திகளோடு ரீல்ஸ் எடுத்த கும்பல்! பகீர் பின்னணி!

webteam

செய்தியாளர்: J.அன்பரசன்

சென்னை தேனாம்பேட்டை திருவள்ளவர் சாலை பகுதியைச் சேர்ந்தவர் கௌதம் (எ) குண்டு கௌதம் (25). இவர் இரண்டு வருடங்களுக்கு முன்பாக பிரியா என்ற பெண்ணை திருமணம் செய்த நிலையில், நந்தனம் சிஐடி காலனி ஸ்ரீராம்பேட்டை பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்றிரவு கௌதம் தனது மனைவியுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் வீட்டுக்குள் புகுந்து கௌதமை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

Attack

இந்நிலையில், கௌதம் மனைவி பிரியா அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சைதாப்பேட்டை போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட கௌதம் (எ) குண்டு கௌதம் மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும், இவர் தேனாம்பேட்டை காவல்நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் தெரியவந்தது.

உயிரிழந்த கௌதம் மனைவி பிரியாவின் முதல் கணவரான ராஜ்கிரணுக்கும் கௌதமிற்கும் ஏற்கனவே முன்பகை இருந்ததாகவும், அதன் காரணமாக இந்த கொலை நடந்து இருக்கலாம் எனவும் காவல்துறையினர் சந்தேகத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், நேற்றிரவு தேனாம்பேட்டை காமராஜர் அரங்கம் எதிரே ஆட்டோவில் வந்த ஐந்து பேர் கத்திகளுடன் ரீல்ஸ் செய்து கொண்டிருப்பதாக தேனாம்பேட்டை ரோந்துப்பணி போலீசருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து உடனடியாக தேனாம்பேட்டை போலீசார் அங்கு சென்றனர்.

Knief

அப்போது இருவர் தப்பியோடிய நிலையில், மூவர் போலீசாரிடம் சிக்கினர். இதையடுதது பட்டாக் கத்திகளை பறிமுதல் செய்து பார்த்தபோது அதில், ரத்தக்கரைகள் இருந்துள்ளது. சந்தேகமடைந்த போலீசார் அவர்களிடம் விசாரித்துள்ளனர். விசாரணையில், பிடிபட்ட மூவரும் சைதாப்பேட்டை பகுதியில் கௌதமை கொலை செய்துவிட்டு தப்பியோடும் போது காமராஜர் அரங்கம் முன்பு ரீல்ஸ் செய்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து தேனாம்பேட்டை ரோந்துப்பணி போலீசார், பிடிபட்ட நபர்களை சைதாப்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், துரைப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரதீப், சுரேஷ், மற்றும் தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த ராஜாபாய் ஆகிய மூவர் என தெரியவந்தது.

தொடர் விசாரணையில், தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த ராஜ்கிரண் மற்றும் கொலை செய்யப்பட்ட கௌதம் ஆகியோர் நண்பர்களாக இருந்து குற்ற சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததும், பின்னர் ராஜ்கிரண் வீட்டிற்கு செல்லும் போது ராஜ்கிரணின் மனைவி பிரியாவுடன் கௌதம் நெருங்கிப் பழகி வந்ததும் தெரியவந்தது. பின்னர் ராஜ்கிரண் மனைவி பிரியாவும் கௌதமும் காதலித்து வந்ததும் பிறகு ராஜ்கிரணை விட்டு பிரியா பிரிந்து வந்து கௌதமை திருமணம் செய்து கொண்டு சிஐடி நகரில் வசித்து வந்ததும் தெரியவந்தது.

Auto

இந்த நிலையில், தன்னுடனே இருந்து தனது மனைவியை பிரித்து அழைத்துச் சென்ற கௌதம் மீது கோபமாக இருந்த ராஜ்கிரண், அடியாட்களை வைத்து கொலை வெறி தாக்குதல் நடத்தியதும் அந்த வழக்கில் கௌதம் மற்றும் பிரியா ஆகியோர் சிறைக்குச் சென்று வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து தன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய கௌதமை பழிவாங்குவதற்காக ராஜ்கிரண் திட்டம் தீட்டி, தனது நண்பர்களோடு சென்று நேற்றிரவு வெட்டிப் படுகொலை செய்ததும் தெரியவந்தது.

இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளி ராஜ்கிரண் மற்றும் அவரது நண்பர்களான சுகுமார், சரவணன் உள்ளிட்டவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.