சென்னையில் வியாபாரிகளை குறிவைத்து பணம் பறித்து வந்த மிளகாய் பொடி கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. பல சம்பவங்களில் தப்பித்த கும்பல், ஒரு காலி பையை திருடியதால் சிக்கியது எப்படி?
சென்னையின் மிக முக்கியமான வர்த்தகப் பகுதிகளில் சவுக்கார்பேட்டையும் ஒன்று. நாள்தோறும் கோடிக் கணக்கில் வியாபாரம் நடைபெறும் இப்பகுதியில் வர்த்தகம் செய்யும் வியாபாரிகள், பல லட்ச ரூபாய்களை சர்வசாதாரணமாக பையில் வைத்து எடுத்துச் செல்வார்கள். அப்படி எடுத்துச் சென்ற காலி பையை, திருடியதால் காவல்துறையிடம் சிக்கியிருக்கிறது, இந்த மிளகாய்பொடி கும்பல்.
சவுக்கார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம். கடந்த 14-ஆம் தேதியன்று வால்டாக்ஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவரிடம் ஒரு பணப்பை இருந்தது. சத்தமில்லாமல் வெங்கடாசலத்தை பின் தொடந்துவந்த கும்பல் ஒன்று, திடீரென அவர் மீது மிளகாய்ப் பொடியைத் தூவி நிலைகுலையச் செய்தது. எரிச்சல் தாங்க முடியாமல் அலறித் துடித்த வெங்கடாசலத்தின் கழுத்தில் கத்தியை வைத்த கொள்ளையர்கள், அவரிடம் இருந்த பணப்பையை பறித்துச் சென்றனர். இதில் ட்விஸ்ட் என்னவென்றால், அந்தப் பையில் பணமே இல்லை என்பதுதான்.
சம்பவத்தன்று சுமார் 40 லட்சம் ரூபாய் வரை பணத்தை வசூல் செய்து எடுத்துச் செல்வதற்காக சவுக்கார்பேட்டைக்குச் சென்றார் வெங்கடாசலம். ஆனால் அவர் எதிர்பார்த்த அளவு பணம் கிடைக்காதது, அவருக்கு நல்லதாக அமைந்தது. வெறும் கையோடு திரும்பியவரை பின் தொடர்ந்து வந்த அந்தக் கும்பல், அவர் வைத்திருந்த காலி பையை திருடிச் சென்றது. இதுகுறித்த புகாரை விசாரித்தபோது, இந்த மிளகாய் பொடி கும்பல், இதே பாணியில், பல்வேறு இடங்களில், பல்வேறு நபர்களை மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது. பணம் எடுத்துச் செல்லும் வியாபாரிகளே இவர்களின் குறி.
சம்பவம் நடந்த இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், 6 பேர் கொண்ட கும்பல் வெங்கடாசலத்தை பின் தொடர்ந்தது தெரியவந்தது. இதுகுறித்த விசாரணை ஒருபுறம் நடைபெற்று வந்த நிலையில், பாரிமுனையில் நடந்த வாகன சோதனையின்போது நாகூர் மீரான் என்பவர் தானாக வந்து சிக்கினார். அவர் வைத்திருந்த இருசக்கர வாகனத்தை சோதனைக்குட்படுத்தியபோது , அது வெங்கடாசலத்திடம் வழிப்பறி செய்ய முயன்ற கும்பல் பயன்படுத்தியது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதன்பின், நாகூர் மீரான் மற்றும் அவரின் கூட்டாளிகள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 3 இருசக்கர வாகனங்கள், செல்போன்கள் ஒரு பட்டா கத்தி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. மிளகாய்ப்பொடி கும்பலை சிறையிலடைத்த காவல்துறையினர், சம்பவம் தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.