குற்றம்

கொடூரத்துக்குள்ளான சிறுமி திடீரென இறந்தது எப்படி..? - வெளிவராத மர்மங்கள்..!

கொடூரத்துக்குள்ளான சிறுமி திடீரென இறந்தது எப்படி..? - வெளிவராத மர்மங்கள்..!

webteam

தமிழகத்தை அதிர்ச்சிக்குள் தள்ளும் மற்றொரு சம்பவமாக உருவெடுத்திருக்கிறது சென்னையில் சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம். சிறுமியின் மரணத்தில் இன்னும் மர்மங்கள் அகலாத நிலையில், அவருக்கு நேர்ந்த நீண்டகால கொடுமை நெஞ்சத்தைப் பதற வைப்பதாக இருக்கிறது. ஏனென்றால் பல நாட்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட அந்த சிறுமி, தனது தாய் மாமன் மூலமே அந்தக் கொடுமையை அனுபவித்திருக்கிறார்.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து விட்டார். தமது இரண்டு பெண் குழந்தைகளைத் தாய் வீட்டில் விட்டுவிட்டு புதுச்சேரியில் பணியாற்றி வந்தார். அப்போது தன்னுடன் வேலை பார்த்து வந்த மற்றொருவரை காதலித்து மணந்து கொண்ட அவர், தனது இரண்டாவது கணவர் மூலம் ஆண் குழந்தையை பெற்றுள்ளார். இதையடுத்து இரண்டு மகள்களையும் அப்பெண் தனது தாய் வீட்டில் வளரவிட்டிருக்கிறார்.

சிறிது காலம் கழித்து தமது பெண் குழந்தைகளைப் பார்க்க தாய் வீட்டுக்குச் சென்ற அப்பெண்ணுக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது. தாய் மாமன் உள்பட 15 பேர் தங்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகவும், அதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டியதாகவும் கூறி கதறித் துடித்திருக்கின்றன அந்தப் பிஞ்சுக் குழந்தைகள். பதறிப்போன தாய் இரண்டு குழந்தைகளையும் தம்மோடு புதுச்சேரிக்கு அழைத்துச் சென்றுவிட்டார். அங்குள்ள பள்ளியில் இரண்டு சிறுமிகளும் படித்து வந்தனர். அவர்களுக்கு நடந்த கொடுமையாருக்கும் தெரியவில்லை. ஒரு நாள் ஏதோ தவறு செய்ததற்காக இரண்டாவது மகளை தாய் அடித்ததாகக் கூறப்படுகிறது. கன்னம் மற்றும் கைகளில் காயத்துடன் பள்ளிக்குச் சென்ற சிறுமியைக் கண்ட ஆசிரியர், அதுகுறித்து அவரிடம் விசாரித்துள்ளார். வீட்டில் நடந்ததைச் சிறுமி கூற, அவரது தாயை அழைத்துப் பேசியுள்ளார் ஆசிரியர்.

சிறுமிக்கு உரிய சிகிச்சை அளித்து அதற்குரிய சான்றிதழை தம்மிடம் கொடுக்க வேண்டும் என்று ஆசிரியர் வலியுறுத்தியுள்ளார். இதனையடுத்து சிறுமிக்கு சிகிச்சை அளித்ததாகச் சான்றிதழ் ஒன்றை அவரது தாய் ஆசிரியரிடம் வழங்கியுள்ளார்‌. அதனை ஏற்காத ஆசிரியர், குழந்தைகள் நலப்பாதுகாப்புக் குழுவுக்குத் தகவல் கொடுத்துள்ளார். விரைந்து சென்ற அதிகாரிகள் இரண்டு சிறுமிகளிடமும், தாயிடமும் விசாரணை நடத்தினர். பின்னர் பரிசோதனைக்காக சிறுமிகள் இருவரும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இரு சிறுமிகளும் 15 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட கொடூரம் அப்போதுதான் வெளி உலகுக்கு தெரியவந்தது. தகவலறிந்து அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் சிறுமிகளின் தாய் மாமன் தீனதயாளன் உள்பட 15 பேரை கைது செய்து, அவர்கள் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். கைதானவர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டதால், பாதுகாப்புக் கருதி தமது மூன்று குழந்தைகள் மற்றும் இரண்டாவது கணவருடன் சென்னைக்கு குடிபெயர்ந்தார் அந்தப்பெண். வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டவர்களில் ஒருவரான 7 வயது சிறுமி அடிக்கடி வயிற்று வலியால் துடித்ததாக தெரிகிறது. இந்நிலையில் வியாழக்கிழமையன்று (நேற்று) கழிவறைக்குச் சென்ற அவர் மயங்கி விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தாய் கூறிய தகவல்களின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றாலும், குழந்தை ஏன் இறந்தது என்ற உண்மை இன்னும் தெரியவரவில்லை. இதனால் குழந்தையின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். அதுமட்டுமின்றி ‘விஸ்செரா’ என்ற மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தவுள்ளனர். தற்கொலை, மர்ம மரணங்கள், அடையாளம் தெரியாத உடல்கள் உள்ளிட்டவற்றிற்கு ‘விஸ்செரா’ முறையை போலீஸார் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த முறையில் குடல், கல்லீரல், கணையம், நுரையீரல் உள்ளிட்ட உடல் உள்ளுறுப்புகளை எடுத்து ஆய்வுக்கு அனுப்பி வைப்பர். இந்த முறை டி.என்.ஏ பரிசோதனை செய்யும் முறைக்கு நிகரானது என்கின்றனர் மருத்துவ வல்லுநர்கள். தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்துார் ஆகிய 4 இடங்களில் இந்த சோதனை மையம் இருக்கிறது. இந்த சோதனை முடிவுகள் வெளிவந்த பின்னரே குழந்தையின் மரணத்தில் உள்ள மர்மங்கள் அகலும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் தாயும் உடந்தையாக இருக்கலாம் என்றும், குழந்தைக்கு நேர்ந்த கொடுமை உண்மை என்றாலும் தற்போது இறந்ததற்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகித்துள்ளனர். ஏனென்றால் குழந்தைக்கு 4 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், அவருக்குச் சரியான சிகிச்சை அளிக்காமல் வீட்டிலேயே மருத்துவம் செய்ததாகவும் தாய் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே இதுதொடர்பாக 174வது குற்றப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.